சைக்கிளிங் செல்பவர்களுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்!

Photo: Land Transport Authority Official Facebook Page

சிங்கப்பூரில் சைக்கிளிங் (Cycling) செல்பவர்களுக்கு அந்நாட்டு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன்படி, சிங்கப்பூரில் உள்ள விரைவுச்சாலைகளில் (Expressways) கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. எனவே, இந்த சாலையில் சைக்கிளிங் செல்லக்கூடாது. சைக்கிளிங் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். இந்த நடைமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என சைக்கிளிங் செல்பவர்களை அறிவுறுத்தியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, நேற்று (06/06/2021) காலை சிங்கப்பூரில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் நடைப்பாதைகளில் சைக்கிளிங் செல்பவர்களை போக்குவரத்து காவல்துறையினர் கண்காணித்தனர். அப்போது, விரைவுச்சாலைகளில் சைக்கிளிங் சென்றவர்கள், ஹெல்மெட் அணியாமல் சைக்கிளிங் சென்றவர்களுக்கு அபராதம் விதித்த காவல்துறையினர், போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றுமாறு அவர்களை அறிவுறுத்தினர்.

அதேசமயம், போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றி சைக்கிளிங் சென்றவர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

போக்குவரத்து விதிகளை மீறி விரைவுச்சாலைகளில் சைக்கிளிங் செல்பவர்களுக்கு 2,000 சிங்கப்பூர் டாலர் வரைக்கும் அபராதம் அல்லது ஆறு மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சூழலில் மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சியுடன், சைக்கிளிங்கும் தேவைப்படுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.