‘திருச்சி, சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை’- இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!

Photo: IndiGO Official Twitter Page

சிங்கப்பூர் அரசின் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணப் பாதைத் திட்டத்தின் (Vaccinated Travel Lane- ‘VTL’) கீழ் இந்தியா, சிங்கப்பூர் இடையேயான விமான போக்குவரத்து வரும் நவம்பர் 29- ஆம் தேதி அன்று தொடங்குகிறது. இதையடுத்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இந்தியாவின் திருச்சி, சென்னை, உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்குவதாக அறிவித்துள்ளனர்.

நிறுவனத்தை ஏமாற்ற போலியாக நடித்த வெளிநாட்டு ஊழியர் விடுவிப்பு

மேலும், இதற்கான பயண அட்டவணையை வெளியிட்டுள்ள விமான நிறுவனங்கள், டிக்கெட் முன்பதிவைத் தொடங்கியுள்ளனர். எனினும், டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் டிக்கெட் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டது. இதனால் சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகளும், இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனர். அதேபோல், திருச்சி, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் அதிகளவில் விமானங்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் விமான நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், திருச்சி, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் வரும் நவம்பர் 29- ஆம் தேதி முதல் தினசரி விமான சேவையைத் தொடங்கவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் (IndiGo) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, 6E37 விமானம் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கும், 6E35 விமானம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கும் இயக்கப்படும். இந்த பயண சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

சிங்கப்பூர்-மலேசியா நில VTL பேருந்து சேவை: 20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்

பயண அட்டவணை, டிக்கெட் முன்பதிவிற்கு https://www.goindigo.in/ என்ற இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 605 நாட்கள் காத்திருப்புக்கு பின் திருச்சி, சிங்கப்பூர் இடையேயான விமான சேவை வரும் நவம்பர் 29- ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தகவலை திருச்சி ஏவியேஷன் (Trichy Aviation) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.