சொந்த வீடு கனவா? – DBS வங்கி அதன் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை உயர்த்துகிறது

(Photo: DBS)

DBS வங்கி அதன் அனைத்து வீட்டுக் கடன் தொகுப்புகளுக்கான வட்டி விகிதத்தையும் உயர்த்தியிருக்கிறது.சிங்கப்பூரின் ஆகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான DBS நேற்று முன்தினம் இரவு முதல் நடப்புக்கு வந்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

DBS வங்கியின் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை ஆராய்ந்த போது இந்த விவரம் தெரிய வந்துள்ளது.மேலும் ஐந்து ஆண்டுகாலத்திற்கு நிலையான வட்டி விகிதத்தைக் கொண்ட வீட்டுக்கடன் தொகுப்பையும் அது ரத்து செய்துள்ளது.இந்த வட்டி விகிதம் முன்னதாக 2.05 சதவீதமாக இருந்தது.

அமெரிக்க மத்திய வங்கியால் இம்மாதத் தொடக்கத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது.கடந்த வாரம் ‘UOB’, ‘OCBC’ வங்கிகள் இரண்டும் தங்களின் வீட்டுக் கடன் தொகுப்புகளின் வட்டி விகிதத்தை உயர்த்தின.இதனையடுத்து DBS வங்கியும் அதன் வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

DBS வங்கியின் ஆண்டுக்கு 2.75 சதவீதம் என்ற நிலையான வட்டி விகிதம் இதர மூன்று உள்ளூர் வங்கிகளுடன் ஒப்பிடும்போது அதிகமாகும்.DBS-இன் இரண்டு ஆண்டுக்கான நிலையான வட்டி விகிதம் 0.3 சதவீதம் அதிகமாகி ஆண்டுக்கு 2.75 சதவீதமாக உள்ளது.

இதன் படி வீடு வாங்கும் ஒருவர்,இரண்டு ஆண்டுக்கான நிலையான வட்டி விகிதத்தில் 3,00,000 வெள்ளிக் கடனை 25 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்துவதற்கான கடனைப் பெற்றால் மாதந்தோறும் 1384 வெள்ளியை வங்கிக்கு செலுத்த வேண்டும்.

கடன் தொகையில் பாதியை நிலையான வட்டி விகிதப்படி பெற்றுக்கொள்வதும் மீதித் தொகையை மாறுபடும் சிறப்பு வட்டி விகிதத்துடன் பெற்றுக்கொள்வதுமே இத்திட்டம்.முழுக்கடன் தொகையையும் நிலையான வட்டி விகிதத்தில் கட்டுவதைக் காட்டிலும் இவ்வழியில் கடன் தொகையைச் செலுத்துவது குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.