மும்மடங்கு அதிகரித்துள்ள டெங்கு காய்ச்சல் – சிங்கப்பூர் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்

சிங்கப்பூரில் இந்த ஆண்டு இதுவரை ஏறத்தாழ 18000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிகப்பட்டிருக்கின்றனர்.கடந்த ஆண்டு எண்ணிக்கையை விட இந்த ஆண்டு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.எனவே,டெங்கு காய்ச்சலுக்கு எதிராக சமூகத் தலைமையிலான நடவடிக்கைகள் இடம்பெற உள்ளன.

அந்த முயற்சிகளை அடுத்து டெங்கு காய்ச்சலிலிருந்து தங்களைப் பாதுகாதுக் கொள்ளக்கூடிய வழிமுறைகள் பற்றியும்,டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் குடியிருப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.சிங்கப்பூரில் டெங்கு பிரச்சனை தற்போது இடையூறாக உள்ளது.

இந்த வருடத்தின் முதல் பாதியில் 389000 பரிசோதனைகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டன.சுமார் 10800 கொசு இனப்பெருக்க இடங்களை தேசிய சுற்றுப்புற வாரியம் கண்டறிந்தது.அவற்றில் கிட்டத்தட்ட பாதி இடங்கள் வீடுகளில் காணப்பட்டன.

டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் 60 சதவீத வீடுகளில் கொசு இனப்பெருக்கத்திற்கு ஏதுவான இடங்கள் இருந்ததாகத் தெரிந்தது.கூட்டு அறிக்கை ஒன்றினை மக்கள் கழகத்துடன் இணைந்து இந்த வாரியம் வெளியிட்டது.அறிக்கையில் பல்வேறு விவரங்களை வாரியம் வெளியிட்டது.

சென்ற மாதம் 19-ஆம் தேதி 25-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் மொத்தம் 1173 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.சமீபத்திய வாரங்களில் டெங்கு காய்ச்சல் கொஞ்சம் குறைந்து வருகிறது.இருப்பினும் அந்தக் காய்ச்சல் பரவுவதற்கான ஆபத்து இன்னும் அதிகமாகவே இருக்கிறது.

சிங்கப்பூரில் டெங்கு கொசுக்கள் பெருகி வருகின்றன.டெங்குக்கு எதிரான நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசாங்கம் வேகப்படுத்தி வருகிறது.குடியிருப்பாளர்களிடம் டெங்கு பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்தி அதன் மூலம் மேலும் பல அடித்தள அமைப்புகள் டெங்குக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள முன்வந்திருக்கின்றன என்றும் இந்த வாரியம் தெரிவித்தது.