பல் மருத்துவர் மீது தொழில் நடவடிக்கை!

Photo: Wikipedia

 

சிங்கப்பூரில் ‘ஃபீனிக்ஸ் டென்டல் சர்ஜரி’ (Phoenix Dental Surgery clinics) என்ற கிளினிக்கில் பல் மருத்துவர் டியோ யூ ஜீன் என்பவர், 2014 மற்றும் 2015- ஆம் ஆண்டு இடைப்பட்டக் காலத்தில் செய்யாத பல் மருத்துவ சிகிச்சைக்கு சாஸ் (Community Health Assist Scheme- ‘Chas’) எனப்படும் சமூக சுகாதார உதவித்திட்டத்தின் போலி சாஸ் கட்டண கோரிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளார். இதன் மூலம் அந்த பல் மருத்துவர், சுகாதார அமைச்சகத்துக்கு வரவேண்டிய 18,000- க்கும் அதிகமான சிங்கப்பூர் டாலரை ஏமாற்றியுள்ளார்.

 

இதனைக் கண்டறிந்த அதிகாரிகள், பல் மருத்துவர் டியோ யூ ஜீன்-யிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இதில் பல் மருத்துவர் டியோ யூ ஜீன் மீது சுமத்தப்பட்ட 25 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், கடந்த ஆண்டு அவருக்கு 46 வாரச்சிறைத் தண்டனையை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பல் மருத்துவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில், பல் மருத்துவர் டியோ யூ ஜீன்-யின் பெயரை சிங்கப்பூரின் பல் மருத்துவ பதிவேட்டில் இருந்து கடந்த ஜூன் 23- ஆம் தேதி நீக்கி அறிவித்தது சிங்கப்பூர் பல் மருத்துவ கவுன்சில் (Singapore Dental Council). இதனால் பல் மருத்துவர் டியோ யூ ஜீன் குறைந்தது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பல் மருத்துவராக தொழில் செய்ய முடியாது. அதன் பிறகு சிங்கப்பூர் பல் மருத்துவ கவுன்சிலில் பெயரைப் பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்கலாம். பதிவு செய்த பின் தனது பல் மருத்துவ தொழிலை அவர் தொடரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமூக சுகாதார உதவித் திட்டத்தின் மூலம் அரசாங்கத்தை ஏமாற்றியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட முதல் நபர் டியோ யூ ஜீன் என்பது குறிப்பிடத்தக்கது.