“மலேசியா, சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு மீண்டும் நேரடி விமான சேவை தொடங்க வேண்டும்”- இந்திய அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம்!

Photo: Air India Express Official Twitter Page

சிங்கப்பூர் அரசின் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணப் பாதைத் திட்டத்தின் (Vaccinated Travel Lane- ‘VTL’) கீழ் இந்தியா, சிங்கப்பூர் இடையேயான விமான போக்குவரத்து வரும் நவம்பர் 29- ஆம் தேதி அன்று தொடங்குகிறது. இதையடுத்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இந்தியாவின் திருச்சி, சென்னை, உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்குவதாக அறிவித்துள்ளனர்.

நிறுவனத்தை ஏமாற்ற போலியாக நடித்த வெளிநாட்டு ஊழியர் விடுவிப்பு

மேலும், இதற்கான பயண அட்டவணையை வெளியிட்டுள்ள விமான நிறுவனங்கள், டிக்கெட் முன்பதிவைத் தொடங்கியுள்ளனர். எனினும், டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் டிக்கெட் முழுவதும் விற்றுத் தீர்ந்துள்ளது. இதனால் சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகளும், இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனர். அதேபோல், திருச்சி- சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் அதிகளவில் விமானங்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் விமான நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், மலேசியா, சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு மீண்டும் நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இது குறித்து இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு இன்று (25/11/2021) கடிதம் எழுதியுள்ளார்.

சிங்கப்பூர்-மலேசியா நில VTL பேருந்து சேவை: 20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கோவிட் கால விமானப் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளாத நிலையைக் குறிப்பிட்டு, அந்நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வர விரும்பும் நேர்வுகளில், நேரடி விமான சேவை இல்லாத காரணத்தால், துபாய், தோகா, கொழும்பு மார்க்கமாக மாற்றுப் பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும், அதன் காரணமாக, பல்வேறு இன்னல்களுடன் அதிக விமானக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியுள்ளதாகவும், சுட்டிக்காட்டி அவர்கள் எதிர்கொள்ளும் இத்தகைய இடர்பாடுகளைத் தீர்ப்பதற்கு தற்காலிக விமான சேவைகளை வழங்கிட ஏதுவாக, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு இடையில் தற்காலிக கோவிட் கால ‘விமான போக்குவரத்து ஏற்பாடுகள்; உடன்படிக்கையைச் செய்துக் கொள்ளுமாறு கோரி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு இன்று (25/11/2021) கடிதம் எழுதியுள்ளார்.” இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வரின் கடிதத்தால் சிங்கப்பூர்- திருச்சி இடையேயான விமான சேவை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.