கவனக்குறைவு காரணமாக வழங்கிய தவறான மருந்துகளால் நோயாளி உயிரிழப்பு; தேக்கா கிளினிக் மருத்துவர் மீது குற்றச்சாட்டு..!!

Doctor allegedly caused patient’s death (Photo : Straits Times)

மருத்துவரின் கவனக்குறைவு காரணமாக ஒருவர் உயிரிழந்ததாக சுமார் 40 ஆண்டுகள் அனுபவம் மிக்க மருத்துவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சந்தர் சாலையில் அமைந்துள்ள தேக்கா கிளினிக் மருந்தகத்தில் மருத்துவராக பணிபுரிந்து வரும் ஹரிதாஸ் ராதாஸ் (வயது 75) கடந்த 2014ஆம் ஆண்டு தம் மருந்தகத்தில் சவரிமுத்து அருள் சேவியர் என்ற நோயாளி ஒருவருக்கு கவனக்குறைவாக 10 புற்றுநோய் மாத்திரைகளை (Methotrexate) கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

முதலில் சவரிமுத்துவிற்கு புற்றுநோய் இருக்கிறதா? என்பதை உறுதி செய்யாமல் மருந்துகள் வழங்கியதும், மேலும் கொடுக்கப்பட்ட மருந்துகளின் அளவும் விதிமுறைக்கு உட்பட்டதாக இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துகளால் பாதிக்கப்பட்ட சவரிமுத்து இந்த தவறான மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார்.

இந்நிலையில், மருத்துவர் ஹரிதாஸ் இம்மாத கடைசியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது. தற்சமயம் 10,000 வெள்ளிகள் அபராதம் கட்டி வெளியே வந்துள்ளார்.

இந்த குற்றத்திற்காக அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம் என்று சிங்கப்பூர் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source: The Straits Times