சிங்கப்பூரில் ஊழியர்கள் தங்கும் விடுதியில் அதிரடி சோதனை – விடுதி இயக்குனர் மீது FEDA சட்டம் பாய்ந்தது.!

Dormitory operator and its director prosecuted under the Foreign Employee Dormitories Act ( Photo : The New Paper)

சிங்கப்பூரில் ஊழியர்கள் தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் மிகவும் அசுத்தமாக தங்குவதற்கு ஏற்ற சூழல் இல்லாத நிலையில் கழிவறைத் தொட்டிகள் உடைந்த நிலையிலும் மற்றும் ஆங்காங்கே சுற்றித் திரியும் கரப்பான் பூச்சிகள் போன்ற சுகாதாரம் சீர்கேடு நிறைந்த விடுதியை பராமரிப்பு செய்யாததன் காரணமாக அதன் இயக்குனர் FEDA சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்த சோதனையில் விடுதியை சுத்தமில்லாமல் பராமரித்த அவ்விடுதியின் இயக்குனர் சிங்கப்பூரை சேர்ந்த பர்வீஸ் அஹ்மத் (வயது 42) மீதும், அவரின் லேபர்டெல் மேனேஜ்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மீதும் வெளிநாடு ஊழியர்கள் தங்கும் விடுதி சட்டம் (FEDA) பாய்ந்துள்ளது.

FEDA சட்டத்தின் கீழ் லேபர் டெல் நிறுவனம் 10 குற்றச்சாட்டுகளையும், இயக்குனர் பர்விஸ் 6 குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்கி உள்ளனர்.

இந்த குறிப்பிட்ட சுகாதார சீர்கேடு நிறைந்த தங்கும் விடுதி ஜூரோங் பெஞ்சுரு ஊழியர் தங்கு விடுதிகள் 1, 2 ஆம் வெஸ்ட் கோஸ்ட் சாலைக்கு அருகில் பெஞ்சுரு பிளேசில் அமைந்துள்ளது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூறுகையில், ‘நாங்கள் நடத்திய சோதனைகளில் அந்த ஊழியர் தங்குவிடுதியின் பராமரிப்பு நிலை மிகவும் மோசமாக இருந்தது. உதாரணம், அங்கு சில இடங்களில் விளக்குகள் இல்லை அப்படி இருந்தாலும் விளக்குகள் உடைந்திருந்தன, குளியலறையில் தண்ணீர் குழாய்கள் வேலை செய்யவில்லை மற்றும் படிக்கட்டுகளும், அதன் கைப்பிடிகளும் பழுதாகியிருந்தன என்று கூறியது.

மேலும், ஊழியர் அறைகள் அசுத்தமாக, ஏற்றுக்கொள்ளமுடியாததாக இருந்தன. அங்கு கரப்பான்பூச்சிகள் சுற்றி திரிந்ததாகவும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது.

‘ஜூரோங் பெஞ்ஜுரு 2’ விடுதியில் உள்ள சில குப்பைத் தொட்டிகளுக்கு மூடிகள் இல்லை, சில கழிவறைகளுக்குக் கதவுகள் இல்லை என்பது கூடுதல் தகவல்.

மேலும், புளு ஸ்டார்ஸ் தங்கு விடுதியில் அடுப்புகளும், தட்டுகள் கழுவும் தொட்டிகளும் உடைந்திருந்தன என்றும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், லேபர்டெல் நிறுவனத்துக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் $50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் பர்விஸின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஓராண்டு வரையிலான சிறை தண்டனை மற்றும் $50,000 வரையிலான அபராதம் விதிக்கப்படலாம், என்று சட்ட ஆவணங்கள் கூறுகின்றன.