சிங்கப்பூரில் அதிக சம்பளமா? – மலேசிய மாநிலம் ஜோகூரில் இருந்து வெளியேறும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்

nurses shortage in johor

மருத்துவமனைகளில் நோயாளிகளை மிகுந்த பொறுமையுடன், கவனமாக பார்த்துக் கொள்வதில் செவிலியர்களுக்கு நிகரானவர்கள் எவருமில்லை. மலேசிய மாநிலமான ஜோகூரில் செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறைக்கு காரணம் சிங்கப்பூரில் அதிக சம்பளம் கிடைப்பது என்று ஜோகூர் அதிகாரி ஒருவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மலேசிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிங்கப்பூரில் அதிக சம்பளம் கிடைப்பதால் பணிபுரிவதற்கு சிங்கப்பூரை பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசிய செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஜோகூர் மாநில சுகாதார மற்றும் ஒற்றுமை தலைவரான Ling Tian Soon ,சுமார் 15000 முதல் 18000 வரை செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும் இந்த பிரச்சனை குறித்து மலேசியாவின் சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin உடன் கலந்தாலோசிக்க விரும்புகிறார்.

சிங்கப்பூரின் சுகாதாரத்துறையில் அதிக எண்ணிக்கையிலான செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக கூறிய Ling “சிங்கப்பூரில் எத்தனை செவிலியர்கள், மருத்துவர்கள் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள் என்பது குறித்த புள்ளி விவரங்கள் ஜோகூர் மாநில அரசிடம் இல்லை. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது ” என்று குறிப்பிட்டார்.

பற்றாக்குறை நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தும் மட்டத்தில் இல்லை என்றாலும் சுகாதார சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இது கவனிக்கப்பட வேண்டும் என்று Ling வலியுறுத்தினார்.