தேசிய தின அணிவகுப்பு ஒத்திகை- 2021: எஸ்.எம்.ஆர்.டி.யின் முக்கிய அறிவிப்பு!

Photo: SMRT Buses Wikipedia

 

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு படிப்படியாக விலக்கிக் கொண்டு வருகிறது. இதனால் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. மேலும், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கொரோனா தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்திக் கொண்டு வருவதால், சிங்கப்பூர் முழுவதும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது. அதேபோல், கொரோனா தடுப்பூசிக்காக முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

 

இந்த நிலையில், சிங்கப்பூரின் தேசிய தினம் வரும் ஆகஸ்ட் மாதம் 9- ஆம் தேதி நடைபெறுகிறது. தேசிய தினத்தைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக, தேசிய தினத்தில் காவல்துறை, ராணுவ படை, விமானப்படை, கப்பற்படை உள்ளிட்டப் பிரிவுகளைச் சேர்ந்த அணி வகுப்பு நடைபெறும். மேலும், மாணவ, மாணவிகளின் அணிவகுப்பும் இடம் பெறும். இதற்கான ஒத்திகை நடைபெறுவதால் பேருந்து சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.எம்.ஆர்.டி. பொதுப் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக எஸ்.எம்.ஆர்.டி. (SMRT Public Transport) பொதுப் போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தேசிய தின அணி வகுப்பு 2021 ஒத்திகை நடைபெறுவதன் காரணமாக, 75, 857, 960, 960e ஆகிய பேருந்து சேவைகளில் ராஃபிள்ஸ் அவென்யூ சாலையில் (Raffles Avenue) ‘தி ஃபுளோட் @ மரீனா பே’ (The Float @ Marina Bay- Bus Stop Code: 02051) என்ற ஒரு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காமல் செல்லும். இன்று (03/07/2021) முதல் ஜூலை 17- ஆம் தேதி வரை ஒவ்வொரு வார சனிக்கிழமையிலும் காலை 11.00 AM மணி முதல் இரவு 08.00 PM மணி வரை, இந்த புதிய அறிவிப்பு நடைமுறையில் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.