‘மின் ஸ்கூட்டர்கள் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு’- தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலப் போக்குவரத்து ஆணையம்!

Photo: CNN

 

சிங்கப்பூரில் மின் சைக்கிள் (Power Assisted Bicycle- ‘PAB’) மற்றும் மின் ஸ்கூட்டர்கள் (e-scooters) பயன்படுத்துவோர்கள் இணைய வழியாக நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும் என நிலப் போக்குவரத்து ஆணையம் (Land Transport Authority) அறிவித்துள்ளது.

 

அதன்படி, ஜூன் 30- ஆம் தேதி முதல் இணைய வழியில் தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 10 சிங்கப்பூர் டாலரைக் கட்டணமாக செலுத்த வேண்டும். வரும் செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதிக்குள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மின் சைக்கிள் மற்றும் மின் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவோருக்கு தேர்வு கட்டணமாக 5 சிங்கப்பூர் டாலரைக் கட்டணமாக செலுத்தினால் போதும். மேலும் ஒருமுறை தேர்வில் தோல்வி அடைந்தால், மறுத்தேர்வுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இந்த தேர்வு அனைவருக்கும் மிகவும் எளிதாக அணுகக்கூடிய வகையில் இருக்கும்.

 

தேர்வு தொடர்பான மின் கையேடுகள் (e-handbooks) go.gov.sg/amrules என்ற இணையதளத்தில் நான்கு மொழிகளிலும் கிடைக்கின்றன. இந்த தேர்வு தமிழ், மலாய், சைனீஸ், ஆங்கிலம் (Tamil, Malay, Chinese, English) ஆகிய நான்கு மொழிகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அடுத்தாண்டு ஜனவரி 1- ஆம் தேதி முதல் பொது இடங்களில் மின் சைக்கிள் மற்றும் மின் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவோர் கட்டாயம் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

 

இந்த இணைய தேர்வில் 30 முதல் 40 கேள்விகள் இடம் பெறும். ஒரு கேள்விக்கு நான்கு விடைகள் (Multiple- Choice Questions) இருக்கும். இதில் சரியான விடையைத் தேர்வர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 80% ஆகும். தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ் (Digital Certificate) வழங்கப்படும்.

 

இந்த தேர்வு தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.pace.sp.edu.sg என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம்.