ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் உள்ள தரை வீட்டில் திடீர் தீ விபத்து!

Photo: SCDF Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் (East Coast Road) உள்ள 12S என்ற எண் கொண்ட தரை வீட்டில் நேற்று (09/01/2023) நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினருக்கு (Singapore Civil Defence Force) நேற்று (09/01/2023) நள்ளிரவு 11.50 PM மணியளவில் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்!

இதையடுத்து, அந்த பகுதியைச் சேர்ந்த காவல்துறையினர் மற்றும் ஆறு தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் வாகனங்களுடன் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையைச் சேர்ந்த வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சியடித்து கொளுந்து விட்டு எரிந்த தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் தீ அடுத்தடுத்து நான்கு தரை வீடுகளுக்குப் பரவியது. இதனால் இன்று (10/01/2023) அதிகாலை 01.30 AM மணியளவில் தீயை முழுவதுமாக அணைத்தனர் தீயணைப்பு வீரர்கள். இதன் காரணமாக, பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் 12P, 12Q, 12R மற்றும் 12S ஆகிய எண்களைக் கொண்ட தரை வீடுகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து தீக்கரையாகின.

ஆயுதம் முனையில் பெண்ணை சிறைப் பிடித்த நபர் – வளைத்து பிடித்த போலீசார்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்து சுமார் 20 குடியிருப்பாளர்களை காவல்துறையினர் பாதுகாப்பாக வெளியேற்றினர். ஒருவருக்கு சிறிய அளவிலான தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் (Singapore General Hospital) அனுமதிக்கப்பட்டார். தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.