இக்கட்டான நேரத்தில் அப்படி ஒரு அதிர்ச்சியா? சிங்கப்பூரில் அன்றாட வாழ்வை சிக்கலாக்கும் அறிவிப்பு!

singapore

சிங்கப்பூரில் அடுத்த 3 மாதங்களுக்கான மின் கட்டணங்கள் உயரவுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பணவீக்கம் காரணமாக உண்டான விலைவாசி உயர்வு கண்ணை கட்டுது. இந்த நேரத்தில் மின் கட்டண உயர்வு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும்.

இதனால் சிங்கப்பூரில் உள்ள விடுதிகள், தனி வீடுகள், தொழில் நிறுவனங்கள் கூடுதலான மின்கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை, ஒரு கிலோவாட் மணிநேரத்துக்கு 30.17 காசு மின்கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த அளவு பொருள் சேவை வரிக்கு முன்னதாக வசூலிக்கப்படும். இதனை மின் நிறுவனமான எஸ்பி குழுமம் உறுதி செய்துள்ளது.

தற்போது மின்கட்டணமாக ஒரு கிலோவாட் மணிநேரத்துக்கு 27.94 காசு வசூலிக்கப்படுகிறது.

இதன்வழி மின்கட்டணம் 8 விழுக்காடு உயர்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சிங்கப்பூரில் மின் கட்டணங்கள் உயர்ந்து வருகின்றன.

இவ்வேளையில் வீடுகளுக்கான எரிவாயு கட்டணம் அடுத்த மூன்று மாதங்களுக்கு உயர்த்தப்படும்.

இதனை குழாய் வழி எரிவாயுவை விநியோகிக்கும் City Energy நிறுவனம் அறிவித்தது.

தற்போது, பொருள் சேவை வரியைச் சேர்க்காமல், எரிவாயுக் கட்டணம் ஒரு கிலோவாட் மணிநேரத்துக்கு 21.66 காசாக உள்ளது.

இனி எரிவாயுக் கட்டணம் ஒரு கிலோவாட் மணிநேரத்துக்கு 23.09 காசாக உயரும். இது 6.6 விழுக்காட்டு உயர்வாகும்.

உலகளாவிய எரிவாயுக் கட்டணம் உயர்ந்ததால் மின்சார, எரிவாயுக் கட்டணங்களை உயர்த்தியதாக எஸ்பி குழுமமும் தெரிவித்துள்ளது.