சிங்கப்பூரில் விற்ற பத்து கார்களில் ஒரு கார் மின்சார கார் – டெஸ்லா பலரின் தேர்வாக உள்ளது !

tesla

சிங்கப்பூரில் கடந்த ஆறு மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட கார்களில் கிட்டத்தட்ட 10 % மின்சார வாகனங்கள் (EVs) ஆகும். நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2022இன் முதல் பாதியில் 16,567 புதிய கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 1,488 கார்கள், மின்சார கார்கள் ஆகும்.

தரைவழிப் போக்குவரத்தில் கார்பனை குறைக்கும் முயற்சிகளை சிங்கப்பூர் துரிதப்படுத்தி வருகிறது. இந்தாண்டின் முதல் ஐந்து மாதங்களின் அனைத்து புதிய கார் பதிவுகளில் 8.4 % புதிய எலக்ட்ரிக் கார்கள் பதிவுகள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் கடந்த மாதம் நடைபெற்ற Temasek Ecosperity Week இல் தெரிவித்துள்ளார். இது 2021 ஆம் ஆண்டை விட இரண்டு மடங்கும் 2020 ஆம் ஆண்டை விட 20 மடங்கும் அதிகமாகும் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த வேகம் கூடும் என்று அவர் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

(ICE- Internal Combustion Engine) உட்புற எரிப்பு எஞ்சின் வாகனத்திலிருந்து மின்சார வாகனத்திற்கு மாறுவது வாகனத்தின் கார்பன் வெளியீட்டைப் பாதியாகக் குறைக்கிறது. மின் வாகனங்களை ஊக்குவிப்பதற்காக, 2025 ஆம் ஆண்டிற்குள் EV சார்ஜர்கள் பொருத்தப்பட்ட 2,000 பொது வீட்டு வாகன நிறுத்துமிடங்களையும், 2030 ஆம் ஆண்டிற்குள் 60,000 EV சார்ஜர்கள் பொருத்தப்பட்ட வீட்டு வாகன நிறுத்துமிடங்களையும் உருவாக்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

மேலும் டெஸ்லா மிகவும் பிரபலமான தேர்வாக, பலராலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.