அவசர நிலையில் சிங்கப்பூர் – Aedes கொசுக்களின் உற்பத்தியை தடுக்க பொதுமக்களுக்கு ஆலோசனை

aedes mosquitos multiples cause to dengue fever in singapore

Covid-19 தொற்றினை தொடர்ந்து கொசுக்களின் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் சிங்கப்பூர் முழுவதும் அதிக அளவில் பரவி வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டில் 5000-க்கும் அதிகமான டெங்கு வழக்குகள் பதிவாகியிருந்தன.ஆனால் 2022ஆம் ஆண்டில் முதல் ஐந்து மாதங்களிலேயே 8000-க்கும் அதிகமான டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன.

டெங்கு காய்ச்சல் தீவிரமடையும் காலமான ஜூன் முதல் அக்டோபர் மாதங்கள் இன்னும் தொடங்குவதற்குள் டெங்கு வழக்குகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியுள்ளது மிகவும் கவலையளிப்பதாக சனிக்கிழமை (May 14) நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் Desmond Tan, Woodsvale Condominium பகுதியில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்

டெங்கு வழக்குகளின் எண்ணிக்கை வாரத்தில் ஒவ்வொருநாள் செங்குத்தான அதிகரிப்பை நோக்கி நகர்வதை காணமுடிகிறது. இது ஒரு அவசர கால நிலை. மேலும் டெங்கு வழக்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சராகவும் இருக்கும் Tan கூறினார்.

ஏப்ரல் மாத இறுதியில் 196 ஆக பதிவாகியிருந்த டெங்கு வழக்குகளின் எண்ணிக்கை, மே 13ஆம் தேதி 1055 டெங்கு வழக்குகள் பதிவாகி இருப்பதாக சனிக்கிழமை அன்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்தது.

சமீபத்திய ஈரப்பதமான வானிலை, மழை மற்றும் வெப்பம் காரணமாக டெங்கு பரவல் அதிகரித்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டெங்கு கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பினால் டெங்கு வழக்குகள் உச்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

Aedes கொசுக்களின் உற்பத்தியை தடுக்கவும், காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தவும், மக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் நீர் தேங்காமல் கவனித்துக் கொள்ள வேண்டுமென்று NEA ஆலோசனை வழங்கியுள்ளது.