“Protect Singapore” மாநாடு – 377A பிரிவைத் தக்கவைக்க 1200 பேர் கூடல் !

protect singapore townhall

தண்டனைச் சட்டம் 377A பிரிவைத் தக்க வைத்துக் கொள்ளவும், திருமணத்தைப் பாதுகாக்கவும் வலியுறுத்துவதற்காக, சிங்கப்பூர் எக்ஸ்போ மாநாட்டு மையத்தில் ஜூலை 23 காலை மூன்று மணி நேர டவுன் ஹால் கூட்டம் நடைபெற்றது. “Protect Singapore Townhall – Safeguarding Our Future” என்ற நிகழ்வில் சுமார் 1,200 பேர் கலந்துகொண்டதாக அதன் ஏற்பாட்டாளர்களான ஜேசன் வோங் மற்றும் முகமது கைர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்த டவுன் ஹால், Chatham House விதிகளின் கீழ் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பாளர்கள் தாங்கள் பெற்ற தகவலைப் பயன்படுத்திக்கொள்ளலாம், ஆனால் பேச்சாளர்களின் அடையாளத்தையோ அல்லது தொடர்பையோ வெளிப்படுத்த கூடாது. ஆர்மர் செக்யூரிட்டி ஊழியர்களும் இந்த கூடத்தில் இருந்தனர். உள்ளே நுழைவதற்கு முன், பங்கேற்பாளர்களின் பைகளை சோதனையிட்டு, வெளியே விட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் நடுத்தர வயது சிங்கப்பூரர்களும், LGBTQ+ சமூகத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரும் இருந்தனர். திருமணத்தின் முக்கியத்துவத்தையும், 377A-ஐ ரத்து செய்வதன் சாத்தியமான விளைவுகளையும், அதற்கு பதிலளிக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய செயல்களையும் விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

திருமணம் மற்றும் குடும்பங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான போதுமான பாதுகாப்புகள் அமைக்கப்படும் வரை, அரசியலமைப்பில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணத்திற்கான வரையறை உட்பட, 377A பிரிவை ரத்து செய்ய வேண்டாம் என்று அரசாங்கத்திற்கு மேலும் அழைப்பு விடுத்துள்ளது.