சிங்கப்பூர் பயணிகளின் தனிமைக் காலத்தைக் குறைத்த ஹாங்காங் அரசு!

Photo: AFP

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் முழு ஊரடங்கை அமல்படுத்தி, கொரோனா தடுப்பூசிப் போடும் பணியை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

 

இதன் பயனாக இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து, முழு ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. அந்தந்த நாட்டு அரசுகள் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருவதால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

 

அந்த வகையில் ஹாங்காங்கில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஹாங்காங் அரசின் தலைமை நிர்வாகியான கேரிலாம் நேற்று (21/06/2021) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது அவர் கூறியதாவது, “ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. தற்போது கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால் சில தளர்வுகளை அறிவிக்க ஹாங்காங் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து ஹாங்காங்கிற்கு வரும் பயணிகள் 21 நாட்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும். இனி ஒர்க் விசா வைத்திருப்பவர்கள், நோய்த்தொற்று அபாயம் உள்ள நாடுகளில் இருந்து வருவோர் ஏற்கனவே கொரோனா தடுப்பூசிச் செலுத்திக் கொண்டிருந்தால் 7 நாட்கள் (ஒரு வாரம்) மட்டும் தனிமையில் இருந்தால் போதும். இந்த நடைமுறை இம்மாத இறுதியில் நடைமுறைக்கு வர உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

 

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அபாயம் உள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரைத் தவிர ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.