சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டினர் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது எப்படி?

Photo: Ministry Of Health/Facebook Page

 

சிங்கப்பூரில் அரசு மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் படிப்படியாக விலகிக் கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

 

மற்றொரு புறம் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை கொரோனா தடுப்பூசியை ஆர்வத்துடன் செலுத்திக் கொண்டு வருகின்றன. இருப்பினும், ஒரு சிலர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வரும் நிலையில், அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

 

இந்த நிலையில் சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூர் குடிமக்களிடம் தொடங்கி 12 வயதிற்கும் மேற்பட்ட அனைத்து நபர்களும் தடுப்பூசிப் போட்டுக்கொள்வதற்கு https://preregister.vaccine.gov.sg/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். குறிப்பாக, சிங்கப்பூரில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினரும் `கொரோனா தடுப்பூசிக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்து தடுப்பூசி நிலையங்களுக்கு நேரில் சென்று செலுத்திக் கொள்ளலாம். முன்பதிவின் போது நீங்கள் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்.

 

இதன் மூலம் நீங்கள் கொரோனா தடுப்பூசிக்கு (COVID-19 Vaccine) முன்பதிவு செய்தது உறுதியானதாகக் கருதப்படும். பின்னர், எந்த தடுப்பூசி நிலையங்களுக்கு செல்ல வேண்டும்? எத்தனை மணிக்கு செல்ல வேண்டும்? என்பது போன்ற தகவலும் அந்த குறுஞ்செய்தியில் இடம் பெற்றிருக்கும். பின்னர், முன்பதிவு செய்தவர்கள் அந்த தடுப்பூசி நிலையங்களுக்கு நேரில் சென்று கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளலாம்.

 

இது தொடர்பாக, உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், 1800-333-9999 என்ற சுகாதார அமைச்சகத்தின் கொரோனா அவசரத் தொலைபேசி எண்ணை அழைக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா தடுப்பூசிக்கு இணையதளத்தில் முன்பதிவு செய்வது எப்படி?

சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ கொரோனா தடுப்பூசி முன்பதிவு இணையதள முகவரி https://preregister.vaccine.gov.sg/ ஆகும். இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்களின் தொலைபேசி எண், பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு முன்பதிவு செய்துக் கொள்ளலாம். குறிப்பு: நீங்கள் வழங்கும் என்.ஆர்.ஐ.சி./ ஃபின் (NRIC/FIN) துல்லியமானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், பிறந்த தேதி சரியாக இருப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.