காந்தி உணவகத்தின் நிர்வாகம் மாறினாலும், உணவின் சுவை மாறாது!

Photo: Google Street View

 

லிட்டில் இந்தியா பகுதிக்கு அருகே உள்ள சந்தர் சாலையில் (Chander Road) செயல்பட்டு வருகிறது காந்தி உணவகம் (Gandhi Restaurant). இந்திய சமூகத்தின் பிரபலமான உணவகங்களில் ஒன்றாக இந்த உணவகம் உள்ளது; அறுசுவை உணவுக்கு பெயர் போனது. சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக நியாயமான விலையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை மனப்பான்மையுடன் அறுசுவை உணவுகளை வழங்கி வருகிறது.

இந்த உணவகத்தின் உரிமையாளர் பக்கிரிசாமி சிதம்பரம் (வயது 79). இவர் உணவகத்தின் தலைமை சமையல் நிபுணராக உள்ளார். இந்த நிலையில், இவர் வயது மூப்பு காரணமாக, தனது உணவகத்தை வேறொரு நிர்வாகத்திற்கு விற்றுள்ளார். அதன்படி, இந்த காந்தி உணவகத்தின் நிர்வாகம் ‘கேஷுவரினா கறி’ க்கு (Casuarina Curry) மாறவுள்ளது.

‘கேஷுவரினா கறி’ உணவகத்தின் உரிமையாளர் இளங்கோ சுப்பிரமணியம் கூறுகையில், “உணவகத்தின் நிர்வாகம் மட்டும்தான் மாறவுள்ளது. உணவகத்தின் பெயர், உணவின் தரம், உணவின் விலை ஆகியவை வழக்கம் போல் இருக்கும். சிறப்புமிக்க இந்த உணவகம் வாடிக்கையாளர்களுக்காக வழக்கம் போல் செயல்படும்” எனத் தெரிவித்தார்.

தேசிய மேம்பாட்டு அமைச்சக கட்டிடத்தில் நள்ளிரவில் தீ விபத்து.!

காந்தி உணவகத்தின் உரிமையாளரின் மகன் ராஜ்மோகன் கூறுகையில், “எனது தந்தை 80 வயதை எட்டவுள்ளார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடினமாக உழைத்த அவருக்கு இப்போது ஓய்வு எடுக்கும் காலம் வந்துவிட்டது. உணவகத்தில் இப்போது பணியாற்றி வரும் ஊழியர்களும், சமையல் நிபுணர்களும் தொடர்ந்து, இங்கேயே பணியாற்றுவார்கள். வரும் ஆகஸ்ட் மாதம் 20- ஆம் தேதி முதல் காந்தி உணவகத்தை ‘கேஷுவரினா கறி’ நிர்வாகம் ஏற்று நடத்தும். உணவகத்தில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், அடுத்த வாரம் திங்கள்கிழமை முதல் உணவகம் மூடப்பட்டிருக்கும்” எனத் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் அதிக அளவில் இந்த உணவகத்திற்கு சென்று உணவருந்திச் செல்கின்றன. ஏனெனில் முழுக்க முழுக்க தமிழகத்தின் பாரம்பரியமிக்க அறுசுவை உணவுகள், இங்கு கிடைக்கின்றது. மேலும், தங்கள் வீட்டில் சமைப்பது போல் உணவின் சுவை மற்றும் தரம், நியாயமான விலை உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் இருப்பதால், இந்த உணவகத்திற்கு அதிக பேர் வருகை தருகின்றன. மேலும், சிங்கப்பூர் செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த உணவகத்திற்கு செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.