கொள்ளை முயற்சி- சந்தேகத்தின் பேரில் 20 வயது இளைஞர் கைது!

File Photo Via The Singapore Police Force

 

கடந்த ஜூலை 13- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள புவாங்காக் (Buangkok) பகுதியில் ஜெரால்ட் டிரைவில் (Gerald Drive) நடந்த கொள்ளைச் சம்பவம் பற்றி தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல்துறை நேற்று (15/07/2021) தெரிவித்துள்ளது.

 

இந்த சம்பவம் குறித்து காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், “ஒருவர், விலை உயர்ந்த கடிகாரங்களை விற்பனை செய்யும் இணைய தளத்தின் மூலம் விற்பனையாளரைத் தொடர்பு கொண்டுள்ளார். பின்னர், விற்பனையாளரின் அறிவுறுத்தலின் பேரில் அவர், ஜெரால்ட் டிரைவுக்கு வந்துள்ளார். அப்போது, 20 வயது இளைஞர் அவரை அணுகி, கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த 1,00,000 சிங்கப்பூர் டாலரைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இருப்பினும் அவர் பணத்தைத் தறாமல், அந்த இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அந்த இளைஞர் அவரை தாக்கி விட்டு, பணம் உள்ளிட்ட எதையும் திருடாமல் அந்த இடத்தில இருந்து தப்பி ஒட்டிவிட்டார்.

 

இதில் பாதிக்கப்பட்டவரின் முகத்தின் இடது பக்கத்தில் ஒரு வெட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர், பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கணிகாணிப்பு கேமராப் பதிவில் பதிவான படங்களை அடிப்படையாக கொண்டு ஆங் மோ கியோ காவல்துறைப் பிரிவினர் (Ang Mo Kio Division) தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், ஜூலை 15- ஆம் தேதி அன்று சந்தேகத்தின் பேரில் 20 வயது இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

 

இந்த இளைஞரை காவல்துறையினர் இன்று (17/07/2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றன. இளைஞர் மீது ஆயுதம் ஏந்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும்.

 

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த இளைஞருக்கு ஐந்து ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

 

பொது வெளியில் பொது மக்கள் செல்லும் போது பெரிய அளவில் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.