கண்ணாடி கதவு உடைந்து விழுந்து இரண்டு வயது குழந்தை காயம்! – பதறிச் சென்று கட்டியணைத்த பாட்டி!

glass door shatters; pc- mothership.sg
சிங்கப்பூரின் செராங்கூன் பகுதியில் அமைந்துள்ள தி கார்டன் ரெசிடென்சஸ் என்ற குடியிருப்பு வளாகத்தில் இருந்த வயதான பாட்டிக்கும்,அவரது இரண்டு வயது பேத்திக்கும் காயங்கள் ஏற்பட்டது.
குளியலறைக் கண்ணாடியின் கதவு எதிர்பாராத விதமாக உடைந்து விழுந்ததில் இருவருக்கும் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.65 வயதான வாங் என்ற பாட்டி அவரது பேத்தியைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதாகக் கூறினார்.
2021-இல் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட காண்டோமினியம் குடியிருப்பில் சுமார் மூன்று மாதங்களாக வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

அவரது பேத்தி கண்ணாடிக் கதவை எதிர்நோக்கி இருந்தபோது பயங்கர சத்தத்துடன் கண்ணாடி உடைந்து விழுந்ததாகவும் கண்ணாடித் துண்டுகள் குழந்தையின் உடலில் சிதறி வெட்டுக் காயங்களை ஏற்படுத்தின.
வாங் பதறியடித்து பேத்தியை கட்டியணைத்த போது அவரது கைகளில் காயங்கள் ஏற்பட்டன.குழந்தையின் தாய் லீ இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
மருத்துவர் தனது மகளின் உடலில் இருந்து கண்ணாடித் துண்டுகளைப் பிரித்தெடுக்க இரண்டு மணிநேரம் எடுத்துக்கொண்டதாக லீ கூறினார்.
இச்சம்பவத்திற்கு பிறகு குழந்தை சில நேரங்களில் இரவில் அழுவதாகவும்,இது மிகவும் கவலை அளிப்பதாகவும் லீ கூறினார்.சம்பவத்திற்கு தாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என்று கண்ணாடி உற்பத்தியாளர் கூறியதாக லீ பகிர்ந்து கொண்டார்.
இருப்பினும், கண்ணாடி உற்பத்தியாளர், இழப்பீடாக S$2,000 வவுச்சரை வழங்க முடியும் என்றும், குடும்பத்திற்கு புதிய கண்ணாடி கதவை மீண்டும் நிறுவ உதவ முடியும் என்றும் தெரிவித்தார்.