குளுகுளு பேருந்து நிறுத்தம்! – சிங்கப்பூரில் பயணிகளுக்கு வசதியான அனுபவத்தை வழங்க திட்டம்

GREEN ROOF COOL BUS STOP SINGAPORE

சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.கோடைகாலத்தில் வெளியே செல்லும் மக்கள் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் இடைவேளையில் மிகவும் சூடான சூழலை எதிர்கொள்கின்றனர்.

இதற்குத் தீர்வு வழங்க விரும்பிய தேசியப் பூங்காக் கழகமும் நிலப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூரை பசுமை வளத்தினால் குளுமைப் படுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பசுமைக் கூரை பேருந்து நிறுத்தங்களை அமைத்து வருகின்றன.

பயணிகளுக்கு வெப்பத்தைத் தணித்து வசதியான சூழலை வழங்கும் வகையில் இத்தகைய ஏற்பாடுகளை செய்து வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

 

பசுமைக்கூரை தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட ஆய்வில் இந்தக் கூரைகள் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைக் குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த ஜூலை மாத நிலவரப்படி 30 பேருந்து நிறுத்தங்களில் பசுமைக் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.மொத்தமாக 150 நிறுத்தங்களில் அந்தக் கூரைகள் அமைக்கப்படும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் படிப்படியாக மற்ற நிறுத்தங்களில் கூரைகள் அமைக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.