வாடகை வீட்டிலிருந்து சொந்த வீடுகளை வாங்கும் சிங்கப்பூரர்கள்! – மானியம் வழங்கி ஆதரவு அளிக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்..

Photo: Housing and Development Board

சிங்கப்பூர் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் புதிய புள்ளிவிவர அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, சிங்கப்பூரில் கடந்த ஆண்டு மட்டும் வாடகை வீட்டில் இருந்த 700 பேர் சொந்தமாக வீடுகளை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் வாடகை வீட்டில் தங்கியிருந்த 7,800க்கும் மேற்பட்டோர் சொந்தமாக வீடுகளை வாங்கியுள்ளனர்.

கழகம் வழங்கிய மானியத்தினால், சிங்கப்பூரில் இது சாத்தியமாகியுள்ளது. இன்னும் வாடகை வீட்டில் வசிக்கும் 2,300 பேர், சொந்த வீடுகளை வாங்குவதற்கு மானியம் வழங்கி ஆதரவு வழங்கப்படுவதாகக் கழகம் குறிப்பிட்டுள்ளது. தற்போது, அவர்களின் புது வீடுகளுக்கான கட்டுமானப் பணி நிறைவடைவதற்குக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீவக அமைப்பு அதன் திட்டத்தை விரிவுபடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் வெளியிடப்படும் புதிய வீடுகளுடன் அது நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

அதேசமயம், தற்போது வாடகை வீட்டில் இருப்போர், மூவறை வீடுகளை வாங்க தகுதி பெற்றால், குறைந்த குத்தகை காலத்தில் அதனை வாங்கிக் கொள்ள அங்கீகாரம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், அதற்கான நிபந்தனைகள் உண்டு என்றும் தெரிவித்துள்ளது.