ராணுவ மருத்துவ நிறுவனத்தின் முதல் பெண் தளபதியாக இந்தியர் நியமனம்!

Photo: MINDEF

 

சிங்கப்பூரில் ராணுவ படையில் ராணுவ மருத்துவ நிறுவனத்தின் முதல் பெண் தளபதியாக (SAF’s Military Medicine Institute) இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஷாலினி அருளானந்தம் நேற்று (25/06/2021) பொறுப்பேற்றுக் கொண்டார். 42 வயதான ஷாலினி அருளானந்தம் காது, மூக்கு மற்றும் தொண்டை அறுவைச் சிகிச்சை மருத்துவ நிபுணர் ஆவர்.

 

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஷாலினி அருளானந்தம், “உயர் பதவி வகிப்பதில் பெண்கள், ஆண்களுக்கு நிகரானவர்கள். ஆண்களுக்கான வாய்ப்புகளைப் பெண்களும் பெற முடியும். சில நேரங்களில் ஆண்களைப் போன்று நம்மால் பணியாற்ற முடியுமா என்ற சந்தேகம் பெண்களுக்கு எழும். உயர் பதவி வகிக்கும் சில பெண்களில் ஒருவர் என்கிற முறையில், தங்களுடன் வேலை செய்பவர்களில் தாய்மார்கள் அதிகம் இல்லை. இதை உணரும் போது சில சமயங்களில் நம்மால் முடியுமா என்ற சந்தேகம் அவ்வப்போது எட்டிப் பார்க்கும். இதைக் கடந்து செல்வதே முக்கிய சவால் என்று நினைக்கிறேன்.

 

995 அழைப்புகளுக்கு சென்ற ஆம்புலன்ஸ்கள் என்னுடைய பொறுப்பின் ஒரு பகுதியாகும். கொரோனாவுக்கு எதிரான தனிப்பட்ட பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியிருந்தது. சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை சார்பில் ஸ்வாப்பிங் கொரோனா (Swabbing Operations For Covid-19 tests) பரிசோதனைகளும் நடத்தப்பட்டது. மேலும் தனியார் வாடகை ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது? மற்றும் அவர்களின் வாகனங்களை சுத்திகரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

 

இவர் கடற்படை நீருக்கடியில் மருத்துவ மையம் (Naval Underwater Medicine Centre) மற்றும் மத்திய மனிதவள தளத்தின் மருத்துவ வகைப்பாடு மையம் (Central Manpower Base’s Medical Classification Centre) ஆகியவற்றின் தலைவராக இருந்துள்ளார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் (Singapore Civil Defence Force- ‘SCDF’) தலைமை மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். “இது தனது மிகவும் சவாலான சந்திப்புகளில் ஒன்றாகும்” என சாலினி அருளானந்தம் கூறினார்.