சிங்கப்பூர் சுகாதார அமைச்சருக்கு டெங்கு காய்ச்சல் – பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வலியுறுத்திய அமைச்சர் Ong

சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் Ong Ye Kung டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை பிற்பகல் பகிர்ந்த பேஸ்புக் பதிவில் ,கடந்த சனிக்கிழமை தனது உடல் தசையில் மிகுந்த வலி ஏற்பட்டதாகவும், உடற்பயிற்சியினால் வலி ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்பத்தில் எண்ணியதாகவும் கூறினார் .

உடல் வலியானது தொடர்ந்ததால் விரைவான ஆன்டிஜன் பரிசோதனைகளை மீண்டும் மீண்டும் எடுத்ததில் அனைத்து முடிவுகளும் எதிர்மறையாக இருந்தது என்று பதிவில் குறிப்பிட்டிருந்தார். வியாழக்கிழமை அன்று உடல் முழுவதும் சொறி வரத்தொடங்கியது.ரத்தப் பரிசோதனை செய்ததில் டெங்கு இருப்பது உறுதியானதாகவும் கூறினார்.

தனது ரத்தத்தில் பிளேட்லெட் திசுக்களின் எண்ணிக்கை இயல்பை விட சற்று குறைவாக இருப்பதாகவும் ,தீவிரம் அடையவில்லை என்றும் Ong கூறினார். சுகாதார அமைச்சர் Ong -இன் மருத்துவர் காய்ச்சலை எப்படியாவது அமைச்சர் தாங்கி கொண்டதாகவும் ,டெங்குவில் இருந்து குணம் அடைவதற்கான பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.

உடம்பில் எப்போதும் வறட்சியின்றி நீரேற்றத்துடன்(Hydration) இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று அமைச்சருக்கு மருத்துவர் பரிந்துரைத்துள்ளார். இந்த நீண்ட வார இறுதியில் மருத்துவரின் பரிந்துரைப்படி நிம்மதியாக ஓய்வெடுத்து உடல்நலனை பாதுகாக்கப் போவதாகவும் அமைச்சர் கூறினார்.

சிங்கப்பூர் மக்கள் டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் வலியுறுத்தினார். தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) வாராந்திர டெங்கு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

Holland-க்கு அருகிலுள்ள Grove Crescent, Grove Drive மற்றும் Holland Grove Drive பகுதிகள் சிங்கப்பூரின் டெங்கு தீவிரமாக பரவும் பகுதிகளாக அமைந்துள்ளன என்று கூறப்படுகிறது