சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு வந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள், வெண்டிலேட்டர்கள்!

Photo: India in Singapore Official Twitter Page

 

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தற்போது குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பயனாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது பொதுமக்களை ஆறுதல் அடைய செய்துள்ளது.

 

மேலும், பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி கிருமிநாசினி (அல்லது) சோப்பைப் பயன்படுத்தி கழுவ வேண்டும்; தகுதி வாய்ந்தவர்கள் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை இந்திய அரசு வழங்கியுள்ளது.

 

இந்த நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகள் திரவ மருத்துவ ஆக்சிஜன் கொண்ட டேங்கர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை விமானங்கள் மூலம் அனுப்பி உதவி வருகின்றன.

 

இந்நிலையில் சிங்கப்பூர் நாட்டுக்கான இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளப் பதிவில், “சிங்கப்பூரில் இருந்து 22 இந்திய விமானப் படை விமானங்கள் மற்றும் 3 இந்திய கடற்படை கப்பல்கள் மூலம் 85 ஐஎஸ்ஓ கிரையோஜெனிக் ஆக்சிஜன் டேங்கர்கள், 2,140 வெண்டிலேட்டர்கள் மற்றும் பிபப்புகள் (BiPAPs), 8,314 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 16,366 மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள், 51,000 ஆக்சிமீட்டர்கள் உள்ளிட்டவை இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 38 நாட்களில் அனுப்பப்பட்டவை ஆகும். கொரோனாவுடன் போராடும் இந்தியாவிற்கு உதவிய மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் இந்திய தூதரகத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்”. இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதிவுடன் இது தொடர்பான வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.