முடிவுக்கு கொண்டுவர வேண்டும்!! தைப்பூசத்தை முன்னிட்டு இந்து அறக்கட்டளையின் முக்கிய அறிவிப்பு..

Singapore thaipusam
Singapore Thaipusam

சிங்கப்பூரின் தைப்பூசத் திருவிழாவின் போது மது அருந்தும் போக்கு தொடர்ந்து வருகிறது. எனவே, இந்து அறக்கட்டளை வாரியம் திருவிழாவில் மது அருந்தும் போக்கைத் தடுக்க ஒரு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. பால்குடம், காவடி என நேர்த்திக்கடனைச் செலுத்த ஆயிரக் கணக்கானோர் திரளும் பொது நிகழ்ச்சிதான் தைப்பூசத் திருவிழா ஆகும்.

இந்தத் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்த பங்கேற்கும் பக்தர்களுடன் பாத ஊர்வலத்தில் செல்லும் சிலர், மது போதையில் இருப்பதையும் புகை பிடிப்பதையும் அவ்வப்போது காணமுடிகிறது. இறைவன் மீதான அதீத பக்தியில் நேர்த்திக்கடன் செலுத்த திரண்டிருக்கும் பக்தர்களுக்கு மத்தியில் சிலர் இழிவாக நடந்து கொள்வது தெரியவந்துள்ளது.

எனவே, இத்தகைய ஒழுங்கற்ற போக்கை கட்டுப்படுத்தும் முயற்சியில் வாரியம் இறங்கியுள்ளது. அதன்படி, முதல்கட்ட முயற்சியாக தைப்பூச ஊர்வலத்திலும் கோவில் வளாகத்திலும் மது அருந்துவது மற்றும் புகைப் பிடிப்பது போன்ற தரமற்ற செயல்களைக் கைவிடுமாறு சிலர் கேட்டுக்கொள்ளும் வீடியோ காட்சிகள் வாரியத்தின் Facebook, Instagram பக்கங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்த வீடியோப் பதிவுகளை நண்பர்களுடனும் குடும்ப உறுப்பினர்களுடனும் பகிர்ந்துகொள்ளும்படி வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. தைப்பூசத் திருவிழா நாளை மறுநாள் கோலாகலமாக (பிப்ரவரி 5) நடைபெறவுள்ளது. அத்துடன் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் திருவிழாவில் பாத ஊர்வலமும் காவடிகளும் இடம்பெற உள்ளதால் திருவிழாவில் மது அருந்திவிட்டு வரும் போக்கை, ஒரு சமூகமாக அனைவரும் ஒன்றிணைந்து முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று வாரியம் தெரிவித்துள்ளது.