திக்குமுக்காடிப்போன சிங்கப்பூர்-மலேசியா எல்லை! ஒரே நேரத்தில் அரை மில்லியன் மக்கள்.. திணறிய ICA!

ஏப். 29 முதல் மே 3 வரையிலான மொத்தம் 491,400 பயணிகள் நிலச் சோதனைச் சாவடிகளைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் இருந்து மலேசியா புறப்பட்டுச் சென்றதாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ஐசிஏ) புதன்கிழமை (மே 4) தெரிவித்துள்ளது.

பெரும்பாலானோர் காரில் பயணம் செய்தனர். அவர்களின் எண்ணிக்கை 201,900 பேர் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் 155,700 பேர் பேருந்தில் புறப்பட்டனர். 133,800 பேர் மோட்டார் சைக்கிள்களில் சென்றனர்.

இதே காலகட்டத்தில் மலேசியாவில் இருந்து நிலச் சோதனைச் சாவடிகள் வழியாக மொத்தம் 462,400 பயணிகள் சிங்கப்பூர் வந்தடைந்தனர்.

கடந்த வாரம், தொழிலாளர் தினத்தையொட்டி மே 1ம் தேதியும், மே 3ம் தேதி ஹரி ராய புசாவையொட்டியும் விடுமுறை அளிக்கப்பட்டது. நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக நில எல்லையை கடக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சுமார் 280,000 பயணிகள் சென்ற நிலையில்,அ அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்புவதால் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று  ICA கூறியது .

சிங்கப்பூர்-மலேசியா நில எல்லை ஏப்ரல் 1 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது, இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மக்கள் தனிமைப்படுத்தல் அல்லது கோவிட்-19 சோதனை இல்லாமல் சென்று வருகின்றனர்.

முன்னதாக ஏப்ரல் மாத புனித வெள்ளி வார இறுதியில், சுமார் 436,800 பயணிகள் நிலச் சோதனைச் சாவடிகளைப் பயன்படுத்தினர்.