குடிநுழைவுக் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியருக்கு சிறை!

File Photo Via The Singapore Police Force

 

சிங்கப்பூரின் குடிநுழைவுத்துறை மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (Immigration and Checkpoints Authority- ‘ICA’) நேற்று (11/06/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் உள்ள ரோவல் சாலையில் (Rowell Road) அமைந்துள்ள தனது வீட்டில் குடிநுழைவுக் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இந்தியாவைச் சேர்ந்த 37 வயதான பரமசிவம் சீமானுக்கு 9 மாதங்கள் மற்றும் 2 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று (11/06/2021) உத்தரவிட்டது

 

கடந்த ஜூன் மாதம் 30- ஆம் தேதி அன்று ரோவல் சாலையில் உள்ள பரமசிவம் சீமான் வீட்டில் குடிநுழைவுத்துறை மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 26 வயதான இலங்கை நாட்டைச் சேர்ந்த அப்துல் காதீர் நைனா என்பவரை கைது செய்தனர். அவர் சிங்கப்பூரில் தங்க அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்தையும் மீறி 150 நாட்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்துள்ளார்.

 

வீட்டின் படுக்கை இடத்தை வாடகைக்கு விட்டபோது அப்துல் காதீர் நைனாவிடம் பரமசிவம் சீமான் எந்த ஒரு அடையாள ஆவணத்தையும் கேட்டுப் பெறவில்லை. அவர் சட்டப்படியானவரா என்பதை பரமசிவம் சீமான் சரிபார்க்கவில்லை.

 

இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ரோவல் சாலையில் உள்ள வீடு ஒன்றின் முதல் வாடகைத்தாரரான தனது நண்பரை தவறான வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு பரமசிவம் ஏமாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையெழுத்திட்ட அந்த நபர், வாடகைக்கும் விடப்படும் வீடு பஃப்ளோ (Buffalo Road) சாலையில் உள்ள மற்றொரு வீட்டுக்கானது எனக் கருதி ஒப்பந்தத்தைப் படிக்காமல் கையெழுத்திட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, கூடுதல் வருவாய்க்காக ரோவல் சாலையில் உள்ள வீட்டை தன்னைச் சேர்ந்தவர்களுக்கு பரமசிவம் சீமான் உள்வாடகைக்கு விட்டு வந்துள்ளார். அந்த வாடகைத்தாரருக்கு வாய்மொழி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

குடிநுழைவுச் சட்டத்தை மதிக்காமல் பொறுப்பற்ற வகையில் நடந்து குடிநுழைவுக் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தக் குற்றத்தில் பரமசிவம் சீமான் ஈடுபட்டுள்ளார். குடிநுழைவுக் குற்றத்திற்காக அப்துல் காதீர் நைனாருக்கு ஒரு மாதம் (ஜூலை மாதம்) சிறைத்தண்டனை மற்றும் மூன்று பிரம்படிகள் (Three Strokes) ஆகியவை தண்டனைகளாக விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

குடிநுழைவுக் குற்றவாளிகளைக் கொண்டிருக்கும் எந்தவொரு நபருக்கும் எதிராக குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.