“அட என்னப்பா! முக்கால்வாசி பெட்ரோல் இல்லைனா வண்டியை திருப்பி விடுவாங்களா? ” – சிங்கப்பூருக்குள் நுழைய என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?

Photo: Immigration & Checkpoints Authority Official Facebook Page

Covid-19 வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த சிங்கப்பூர் – மலேசியா நில எல்லையானது இந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது. தினசரி சிங்கப்பூர் – மலேசியா நில எல்லையை கடந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது .விடுமுறை நாட்களில் அதிக அளவிலான மக்கள் நில எல்லை வழியாக பயணம் செய்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைக்கு இடையே தினசரி பயணம் செய்யும் பயணிகளின் சராசரி எண்ணிக்கை 2,62,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பள்ளி விடுமுறை காலமான ஜூன் மாதத்தில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நேற்று வெளியிட்ட அறிக்கையின் போது சிங்கப்பூர் குடிவரவுத்துறை மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.

விடுமுறைக்குப் பிறகு ஜூன் 27ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் குடிவரவு சோதனை சாவடிகளில் செய்யப்படும் சோதனைகளுக்கு கூடுதல் நேரம் தேவைப்படும் என்பதை சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே பயணம் செய்யும் பயணிகள் நினைவில் கொள்ளவேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியது.

இரு நாடுகளுக்கிடையே பயணம் செய்வதற்கு முன்பு போக்குவரத்து சூழ்நிலையை கண்காணிக்க ‘ஒன் மானிட்டரிங்’ இணையதளத்தை அணுகலாம் அல்லது குடிவரவு ஆணையத்தின் பேஸ்புக் பக்கத்தை நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு சிங்கப்பூரில் பதிவுபெற்ற காரில் செல்லும் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களில் 75% பெட்ரோலை நிரப்பி இருக்க வேண்டும் அதாவது முக்கால்வாசி நிரம்பியிருக்க வேண்டும் இல்லையெனில் வாகனங்கள் சோதனை சாவடிகளில் திருப்பி விடப்படலாம் என்று ஆணையம் நினைவூட்டி உள்ளது .தவறு செய்பவர் மீது நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் அல்லது $500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.