சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் இந்திய ராணுவ தளபதி சந்திப்பு!

Photo: Ministry Of Defence, Singapore

மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ள இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே, நேற்று (05/04/2022) காலை சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென்னைச் சந்தித்தார்.

பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தால் பாலியல் குற்றவாளிகள் தண்டனை காலம் முடிந்தாலும் சிறையில் மீண்டும் அடைக்கப்படுவார்கள் – அமைச்சர் சண்முகம் நாடாளுமன்றத்தில் பதில்

இது தொடர்பாக, சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சகம் (Ministry Of Defence, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் மற்றும் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே சிங்கப்பூருக்கும், இந்தியாவுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால இரு தரப்பு பாதுகாப்பு உறவை மீண்டும் உறுதிப்படுத்தினர். மேலும் பிராந்திய புவிசார் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தனர்.

ஏப்ரல் 4- ஆம் தேதி முதல் ஏப்ரல் 6- ஆம் தேதி வரை சிங்கப்பூரில் பயணம் மேற்கொண்டுள்ள ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானேவுக்கு காவல்துறை அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பயணத்தின் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் ராணுவத்தின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் டேவிட் நியோவையும் சந்தித்தார்.

அதைத் தொடர்ந்து, இன்று (06/04/2022) சாங்கி கடற்படைத் தளத்தில் உள்ள சாங்கி பிராந்திய HADR ஒருங்கிணைப்பு மையம் மற்றும் தகவல் இணைவு மையத்தைப் பார்வையிடுவார். பின்னர், கோ கெங் ஸ்வீ கல்லூரியில் (Goh Keng Swee Command and Staff College’s) நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய ராணுவ தளபதி, சிறப்புரையாற்றவுள்ளார்.

சிங்கப்பூர் வரும் இந்தியா உள்ளிட்ட அனைத்து பயணிகளுக்கும் புதிய அப்டேட் – Work Pass-க்கும் பொருந்தும்!

ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானேவின் வருகை சிங்கப்பூருக்கும், இந்தியாவுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சிங்கப்பூர் ராணுவமும், இந்திய ராணுவமும் இருதரப்பு பயிற்சிகள், தொழில்முறை பரிமாற்றங்கள், வருகைகள் ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து தொடர்பு கொள்கின்றன.

இந்த பரஸ்பர நன்மை பயக்கும் தொடர்புகள் இருதரப்பு பாதுகாப்பு உறவை ஆழப்படுத்தியது. பரஸ்பர புரிதலை மேம்படுத்தியது மற்றும் இரு படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தியது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.