தமிழர்களின் மனதுக்கு நெருக்கமான சிங்கப்பூரின் 54வது தேசிய தினம்! இந்திய ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!

singapore 54th national day

Singapore 54th Natonal Day : லிட்டில் இந்தியா என்று தமிழர்களால் அழைக்கப்படும் நாடு சிங்கப்பூர். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டுமெனில், ஹோம் சிக் உள்ளவர்கள் முதலில் தேர்வு செய்யும் நாடு சிங்கப்பூர் மட்டுமே. இன்னும் சொல்லப் போனால், சிங்கப்பூர் வாழ்வியல் பிடித்து, இங்கேயே தமிழர்கள் செட்டில் ஆகியும் வருவது அதிகரித்து வருகிறது. அந்தளவுக்கு இந்தியா – சிங்கப்பூர் இடையேயான பிணைப்பு என்பது நெருக்கமானது.

இந்நிலையில், கடந்த ஆக.9ம் தேதி சிங்கப்பூர் தனது 54-வது தேசிய தினத்தை கொண்டாடியது. இந்த ஆண்டு கொண்டாட்டம் ஒரு சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது நாட்டின் இருநூறு ஆண்டு இலக்குக் கட்டத்தைக் குறிக்கிறது. அதாவது சர் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ் சிங்கப்பூருக்கு வந்து 200 ஆண்டுகள் ஆகின்றன.

இருநூறாண்டுக்கு முன்னர் சிங்கப்பூருக்கு ஆங்கிலேயர்கள் வந்ததன் நிறைவை இது குறிக்கிறது. அதுதான் சிங்கப்பூர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும்.

இந்நிலையில், சிங்கப்பூர் 54வது தேசிய தினத்தை முன்னிட்டு, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சிங்கப்பூர் அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

‘அமைதியான மற்றும் வளமான எதிர்காலம் அமையட்டும்’ என தங்கள் வாழ்த்துச் செய்தியில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியப் பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், “இந்த அபார வெற்றி தங்களின் தலைமைத்துவம் மீது இந்திய மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது” என்று வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.