‘லீ குவான் இயூ’ விருதுப் பெற்ற ஒரே இந்திய மாணவர்!

Photo: Ajmal Sulthan

 

 

சமூக சேவையிலும், பள்ளிப் படிப்பிலும் சிறந்து விளங்கிய 19 வயதான இந்திய மாணவர் அஜ்மல் சுல்தான் அப்துல் காதருக்கு ‘லீ குவான் இயூ’ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் ஒரே இந்திய மாணவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

 

பள்ளிப் படிப்பையும் கடந்து கலைகள், விளையாட்டுகள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் சாதனை படைத்த 430 மாணவர்களை கௌவரவிக்கும் விதமாக, மாணவர்களுக்கு சிங்கப்பூரியில் உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகம் மாணவர் சாதனையாளர் விருதுகளை வழங்கியது.

 

விருது பெற்றவர்களில் 48 மாணவர்கள் மதிப்புமிக்க உயர் விருதான லீ குவான் இயூ முன் மாதிரி மாணவர்/ பயிற்சி விருது, லீ குவான் இயூ இணைப்பாட விருது, லீ குவான் இயூ தொழில்நுட்ப விருது ஆகிய விருதுகளைப் பெற்றனர்.

 

சிறந்த தலைமைத்துவம், நிறுவன திறன்களை வெளிப்படுத்தியது உள்ளிட்டவற்றிற்காக லீ குவான் இயூ இணைப்பாட விருதை அஜ்மல் சுல்தான் அப்துல் காதர் பெற்றார். இந்த விருதை மலேசியா, சீனாவைச் சேர்ந்த இரு மாணவர்களும் பெற்றனர்.

 

மாணவர் அஜ்மல் சுல்தான் அப்துல் காதர் குறித்து பார்ப்போம்!

மாணவர் பேரவை மன்றக் குழுவின் தலைவரான அஜ்மல் சுல்தான் அப்துல் காதர், பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களை ஒரு குழுவாக பணியாற்ற ஒருங்கிணைத்து பல முக்கிய திட்டங்களில் பங்கேற்றுள்ளார். கடந்த 2019- ஆம் ஆண்டு வியட்நாம் இளையர் பயணத் திட்டத்தின் மாணவர் தலைவராகப் பணிப்புரிந்த அஜ்மல் சுல்தான் அப்துல் காதர், அங்குள்ள கே ட்ரே (Khe Tre) என்ற உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்காக ஒரு புதிய கால்பந்து மைதானத்தை உருவாக்க வழி வகுத்தார்.

 

மாணவர் அஜ்மல் சுல்தான் அப்துல் காதர் கூறுகையில், “எந்த வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாலும், கல்வியில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. அது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மனதை நிதானப்படுத்த மனதுக்கு பிடித்த இணைப்பாட நடவடிக்கையில் சேர ஒரு வாய்ப்பைக் கண்டறிய வேண்டும். பள்ளிகள் வழங்கும் வாய்ப்பை ஒருபோதும் தவறவிடக் கூடாது” என்றார்.