இந்திய ஆடவர் மரணம்… உயிரை வாங்கிய நபர் – என்ன நடந்தது?

(Photo: Tan Tock Seng Hospital/ Facebook)

மால் படியில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட இந்திய ஆடவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 26 அன்று, அவர் மற்றொரு நபரால் தள்ளிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கீழே விழுந்ததில், 34 வயதுடைய திரு தேவேந்திரன் சண்முகம் என்ற அவருக்கு மண்டை உடைந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள கான்கார்ட் ஷாப்பிங் மாலுக்கு வெளியே படிக்கட்டுகளில் இருந்து அன்று காலை 6.30 மணியளவில் முஹம்மது அஸ்ஃபரி அப்துல் கஹா (27) என்பவரால் முன்பக்கம் இருந்து தேவேந்திரன் தள்ளப்பட்டதாகவும், இதனால் அவர் பின்நோக்கி கீழே விழுந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருக்கு மண்டை ஓட்டில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டு டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனில்லாமல் ஒருவாரம் கழித்து அவர் இறந்தார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை மாண்டாய் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் நடந்த மறுநாளே குற்றவாளியாக கருதப்படும் அஸ்ஃபரி மீது தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.