சிங்கப்பூரில் கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்வு – “நம்மைச்சுற்றி புயல் கூடுகிறது” பிரதமர் லீயின் தொலைகாட்சி உரை

(Photo: MCI)
சிங்கப்பூரின் தேசிய தினத்திற்கு முன்னதாக ஆகஸ்ட் 8 அன்று பிரதமர் லீ சியென் லூங் தொலைகாட்சி உரையில் அமெரிக்கா,சீனா இடையேயான புகைச்சல் குறித்து விளக்கி எச்சரித்தார்.தைவானில் நிலவும் பதற்றம் குறித்த தவறான கணக்கீடுகளுக்கான வாய்ப்பை தெரிவித்தார்.
நாடுகளுக்கிடையேயான மோதலினால் சிங்கப்பூரில் கடுமையான போட்டி தூண்டப்படும் என்பதால்,அமைதியான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு தயாராக வேண்டும் என்றார்.

அமெரிக்கா-சீனா இடையேயான உறவுகள் மோசமடைந்து,தீர்க்க இயலாத சிக்கல்களாக உருவெடுக்கின்றன.இதிலிருந்து மீண்டு விரைவில் முன்னேற்றம் அடைய வாய்ப்பில்லை.மேலும்,தவறான யூகங்கள்,கணக்கீடுகள் நிலைமையை மோசமாக்கக் கூடியவையாகும்.மோதலினால் உடனடியாக பாதிக்கப்படுவது பொருளாதாரம் என்று பிரதமர் லீ கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சிங்கப்பூரின் பணவீக்கம் உயர்ந்துள்ளது.இதன் விளைவாக உயரும் விலைவாசியைச் சமாளிக்க எதிர்வரும் மாதங்களில் மக்களுக்கு உதவும் விதமாக அரசாங்கம் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.அதிகரித்து வரும் பணவீக்கத்தால் சிங்கப்பூர் நாணய ஆணையம் அதன் கொள்கைகளை இறுக்கியது.

எரிசக்தி விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவினங்களைத் தணிக்க குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ஆதரவு நிதி வழங்குவதாக அறிவித்தது. 5.5 மில்லியன் மக்கள் வாழும் நாடு, தொழில்துறையை மாற்றியமைக்கவும், திறன்களை மேம்படுத்தவும் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் வேண்டும். சமீபத்திய வருடங்களில் அனுபவித்த குறைந்த பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் திரும்ப வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.