இன்டர்போல் அமைப்பால் தேடப்படும் இந்தோனேசியர்- திருப்பி அனுப்பிய சிங்கப்பூர் அதிகாரிகள்!

Photo: Medan State Prosecutor

 

இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பு பட்டியலில் (Interpol’s Red Notice) தேடப்படும் நபரான இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த அடெலின் லிஸை (Adelin Lis) சிங்கப்பூரில் இருந்து அவருடைய நாட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

 

ஊழல் மற்றும் சட்ட விரோதக் குற்றங்களுக்காக அடெலின் லிஸ்யை கடந்த 2008- ஆம் ஆண்டு முதல் இந்தோனேசியா அரசு தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2006- ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் உள்ள இந்தோனேசிய நாட்டு தூதரகத்தில் அடெலின் லிஸ்யை கைது செய்ய முயன்ற போது, அடெலினும், அவரது மெய்காப்பாளர்களும் தூதரகத்தின் ஊழியர்களை அடித்துவிட்டு தப்பி ஓடினர். பின்னர் பெய்ஜிங் காவல்துறை உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டார்.

 

அதைத் தொடர்ந்து, கடந்த 2008- ஆம் ஆண்டு தப்பிய அவரை 2018- ஆம் ஆண்டு சிங்கப்பூரில் காவல்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது, ஹென்ட்ரோ லியோனார்டி என்ற பெயருடன் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தார். அதனையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

இந்த நிலையில், சட்டவிரோத குடிநுழைவு குற்றங்களுக்காக அடெலின் லிஸ்க்கு, 2021 ஜூன் 9- ஆம் தேதி அன்று அவருக்கு 14,000 சிங்கப்பூர் டாலரை அபராதமாக விதிக்கப்பட்டதாக குடிநுழைவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையத்தின் அதிகாரிகள் (Immigration and Checkpoints Authority- ‘ICA’) தெரிவித்துள்ளனர்.

 

மேலும், அடெலினின் அடையாளத்தைச் சரிபார்க்க கடந்த 2018- ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தோனேசிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் எந்தவொரு தகவலையும் தெரிவிக்காததால் 2021- ஆம் ஆண்டு மார்ச் மாதம் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் இந்தோனேசிய அதிகாரிகளுக்கு மீண்டும் நினைவூட்டல்களை அனுப்பியது. இதையடுத்து, இந்தோனேசிய அதிகாரிகள் அடெலின் லிஸின் அடையாளத்தை உறுதிப்படுத்தினர்.

 

அதன் தொடர்ச்சியாக, ஜூன் 14- ஆம் தேதி அன்று அடெலின் தனது சொந்த நாட்டுக்கு திரும்புவதற்காக பயண ஆவணத்தை வெளியிடுமாறு இந்தோனேசிய அதிகாரிகளிடம் சிங்கப்பூரின் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் கேட்டுக்கொண்டது.

 

ஜூன் 18- ஆம் தேதி அன்று, அடெலின் லிஸ் நாடு திரும்புவதற்கான அனைத்து சட்ட நடைமுறைகளுக்கு பிறகு விமான டிக்கெட்டுடன் கூடிய அறிக்கையை இந்தோனேசிய அதிகாரிகள் அளித்தனர். அதைத் தொடர்ந்து, ஜூன் 19- ஆம் தேதி அன்று அடெலின் லிஸ் விமானம் மூலம் இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார் என குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.