பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராகும் சிங்கப்பூர்! மாறும் பருவநிலையே காரணம்

சிங்கப்பூரில் வெளியான அறிக்கை ஒன்று, பருவ மாற்றத்தால் சிங்கப்பூரில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படப் போவதாகவும், சிங்கப்பூர் விரைவில் பருவ மாற்றத்தால் பெரும் சிரமத்தையும், கடும் சவாலையும் சந்திக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

ஐபிபிசி எனும் அரசாங்களுக்கு இடையிலான பருவநிலை மாற்றம் குறித்த குழு, பூமி தாெடர்ந்து வெப்பமடைந்து வருவதால் அதிக சூடேறும் அனல்காற்று, கடலோரப் பகுதிகளில் அதிக கனமழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களாலும் சிங்கப்பூர் பாதிக்கக்கூடும் எனவும், மேலும் மனிதர்களின் நகரமயமாக்கும் செயலால் நகரங்களில் வெப்பநிலையின் அளவும் நாளுக்கு நாள் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உலகளாவிய வெப்பத்தைவிட சிங்கப்பூர் அதிகளவு வெப்பத்தில் மக்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய வெப்பம் 1.1டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மட்டுமே கூடியுள்ளது. ஆனால் 1948-யை விட சிங்கப்பூரின் வெப்பநிலை 1.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் வானிலை ஆய்வு நிலையத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால் வரப்போகும் ஆண்டுகளில் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்பதால், நாட்டினை குளிர்ச்சியாக வைத்திருக்க சிங்கப்பூர் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இம்முயற்சியின் விளைவாக நகர்புறங்களில் அதிக மரங்கள் நடப்பட்டு வருகின்றது, மேலும் தெம்பனிசியில் உள்ள 130க்கும் மேற்பட்ட பொது வீடமைப்பு பிளாக்குளில் வெப்பத்தை பிரதிபலிக்கும் வண்ணப்பூச்சுகளும் பூசப்பட்டு வருகின்றது. மேலும் மனிதர்கள் குளிர்சாதன வசதிகளால் வெப்பமான சூழல்களிலிருந்து தங்களை காத்துக் கொள்ளலாம். ஆனால் விலங்குகள் மற்றும் தாவரங்களின் நிலை கவலைக்குரியது.

பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் அதிக வெப்பத்தால் பனிப்பாறைகள் உருகத் தொடங்கும், இதனால் கடல் நீர்மட்டமும் அதிகரித்து நெருக்கடியை உண்டாக்கலாம் என ஐபிபிசி அறிக்கை தெரிவித்தது.