உள்ளூர் வேலை வாய்ப்புகளைப் பறிக்கும் வெளிநாட்டினர் விவகாரம்: அமைச்சர் சண்முகம் விடுத்த சவாலை ஏற்ற ‘பி.எஸ்.பி’!

 

வெளிநாட்டினர் வேலை வாய்ப்புக் கொள்கைகள் பற்றியும், ‘சீக்கா’ எனப்படும் சிங்கப்பூருக்கும், இந்தியாவுக்கும் இடையிலான முழுமையான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு பற்றியும், விவாதிப்பதற்கான சவாலை சிங்கப்பூர் முன்னேற்ற கட்சி (பி.எஸ்.பி.) ஏற்பதாக தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் தெரிவித்துள்ளார்.

 

மேலும், இது தொடர்பாக தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “இது தொடர்பான கூடுதல் தகவல்களை ஜூலையில் நாடாளுமன்றம் கூடும் போது அரசிடம் இருந்து எதிர்க்கட்சிப் பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல், இதற்கு அடுத்தப்படியாகப் பொருத்தமான தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது குறித்து பி.எஸ்.பி. முடிவு செய்யும். அதைத் தொடர்ந்து விவாதத்திற்கான தேதியை முடிவு செய்ய வேண்டியது நாடாளுமன்ற சபாநாயகரின் பொறுப்பு. கடந்த 2005- ஆம் ஆண்டு முதல் 2020- ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ள எம்ப்லாய்மெண்ட் பாஸ், எஸ் பாஸ் போன்றவற்றின் எண்ணிக்கை தொடர்பான கேள்விகளை பி.எஸ்.பி. எழுப்பும் என்று லியோங் மன் வாய் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து பேசிய சிங்கப்பூரின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகம், “சீக்கா என்பது பிரச்சனைக்குரியது என்று எவராவது கருதினால் அதற்கான தீர்மானத்தை வரையறுத்து வெளிப்படையாக விவாதம் செய்வதன் மூலம் சிங்கப்பூர் மக்கள் பலன் அடைந்தார்களா அல்லது இல்லையா என்பதை நாம் தெரிந்துக் கொள்ள முடியும். சீக்கா பற்றி விவாதிப்பதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் முன் வைக்குமாறு லியோங்கை அழைக்கிறேன். சீக்கா பற்றி வெளியான கருத்துகளில் பெரும்பாலானவை பொய் என்பது உங்களுக்குத் தெரியும்” எனக் கூறியுள்ளார்.

 

சிங்கப்பூரில் உள்ள வேலை வாய்ப்புகளில் உள்ளூர் மக்களைப் புறக்கணித்து, இந்தியா, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளித்து வருவதாக பி.எஸ்.பி. தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.