சட்டவிரோதமாக வெட்டி வீசப்பட்ட மரங்கள்! – அனுமதியின்றி வெட்டியதால் இருவருக்கு அபராதம்

Kranji woodland

சிங்கப்பூரின் கிராஞ்சி வனப்பகுதியில் உள்ள மரங்களைச் சட்டவிரோதமாக வெட்டியதாக JTC நிறுவனத்தின் அதிகாரியும்,அவரது முன்னாள் மேற்பார்வை அதிகாரியும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநர் சோங் புய் சீக்கும் அவரிடம் முன்பு வேலை செய்த மூத்த திட்ட மேலாளர் நியோ ஜெக் லின்னுக்கும் தலா 30,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

அவர்கள் இருவரும் கடந்த வாரம் அவர்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்.கிராஞ்சி குளோஸ், கிராஞ்சி ரோடு ஆகியவற்றுக்கு இடையில் இருந்த பகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு மரங்களை வெட்டி அகற்ற வேண்டியிருந்தது.

COVID-19 நோய்ப்பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.அதன் பின்னர் பணியைத் தொடங்கிய அவர்கள் மரங்களை வெட்டுவதற்கு முக்கியமான தேசிய பூங்காக் கழகத்தின் அனுமதிக்குக் காத்திருந்தால் பணியை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டு விடும் என்று கருதி மரங்களை வெட்ட ஆரம்பித்தனர்.சட்டவிரோதமாக சுமார் 362 மரங்கள் வெட்டப்பட்டன.