மிகப்பெரிய உட்லேண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் திறப்பு!

Photo: SMRT Official Facebook Page

 

கடந்த ஜூன் 13- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய உட்லேண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (Woodlands Integrated Transport Hub) திறக்கப்பட்டது.

 

சிங்கப்பூரில் மிகப்பெரிய ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமாக உள்ள இந்த உட்லேண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் சுமார் 41,500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது.

 

இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (Integrated Transport Hub)- எம்.ஆர்.டி நிலையங்கள் (MRT Stations) மற்றும் அருகிலுள்ள ஷாப்பிங் மால்களுடன் (Shopping Malls) இணைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட இந்த பேருந்து சேவைகள் காஸ்வே பாயிண்ட் ஷாப்பிங் மாலுடனும் (Causeway Point Shopping Mall), வடக்கு- தெற்கு, தாம்சன் கிழக்கு கடற்கரை (Thomson East Coast) பாதைகள் வழியாக இயக்கப்பட்டு உட்லேண்ட்ஸ் எம்.ஆர்.டி. நிலையத்துடனும் இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் இணைக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2016- ஆம் ஆண்டு முதல் குளிரூட்ட வசதி இல்லாத தற்காலிக உட்லேண்ட்ஸ் போக்குவரத்து மையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் புதிய ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக மையத்தில் இயங்கும் 29 பேருந்து சேவைகளில் 25 உட்லேண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்திற்கு மாறியுள்ள நிலையில், 925/925எம், 950, 961/961எம் மற்றும் 965 ஆகிய நான்கு பேருந்து சேவைகள் தொடர்ந்து தற்காலிக மையத்திலிருந்தவாறு இயங்கும்.

 

“புதிய போக்குவரத்து மையம் ஒரு உயிரோட்டமான மற்றும் நவீன சூழலைக் கொண்டுள்ளது” என்கிறார் 16 வயதான இடைநிலைப் பள்ளி மாணவர் ஸ்டீபன் நியோ. அதேபோல் மற்றொரு பயணி ப்ரீத்தி கூறுகையில், “புதிய பேருந்து போக்குவரத்து மையம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி உள்ளது. அதிக மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. எனவே, இது எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. பழைய பேருந்து போக்குவரத்து மையம் சூடாகவும், இருட்டாகவும் இருந்தது” என கூறினார்.

 

புதிய உட்லேண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தில் உள்ள வசதிகள் குறித்து பார்ப்போம்!

போக்குவரத்து மையம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி, அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகளுக்கு உதவுவதற்காக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் அமருவதற்காக இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற்காலி வசதி உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கென்று பிரத்யேக நவீன கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பாகவும், விரைவாகவும் தாங்கள் செல்லும் இடங்களுக்கு செல்ல தேவையான அனைத்து வசதிகளும் இந்த போக்குவரத்து மையத்தில் உள்ளது. பேருந்து எண்கள், பேருந்துகள் செல்லும் வழித்தடங்கள் உள்ளிட்டவை அடங்கிய விவரங்கள் டிஜிட்டல் பலகையில் வைக்கப்பட்டுள்ளது. உணவகங்களும் திறக்கப்பட்டுள்ளது.

 

சிங்கப்பூரில் உள்ள மற்ற பேருந்து போக்குவரத்து மையங்கள்!

1. ஆங் மோ கியோ (Ang Mo Kio),
2. பெடோக் (Bedok),
3. பூன் லே (Boon Lay)
4. கிளெமென்டி (Clementi),
5. ஜு கூன் (Joo Koon),
6. செங்காங் (Sengkang),
7. செராங்கூன் (Serangoon),
8. டோவா பயோ ( Toa Payoh),
9. புக்கிட் பஞ்சாங் (Bukit Panjang),
10. யிஷுன் (Yishun).

 

எஸ்.எம்.ஆர்.டி.யால் (SMRT) செயல்பட்டு வரும் இந்த புதிய உட்லேண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (New Woodlands Integrated Transport Hub) சிங்கப்பூரின் 11- வது போக்குவரத்து மையம் என்பது குறிப்பிடத்தக்கது.