உலகத் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் நுழைந்த சிங்கப்பூரின் முதல் பேட்மிண்டன் வீரர் ஆகிறார் லோ !

loh

சிங்கப்பூர் வீரர் Loh Kean Yew, உலகளாவிய பூப்பந்து ஆண்கள் தரவரிசையில் முதல்முறையாக முதல் ஐந்து இடங்களுக்குள் நுழைந்த சிங்கப்பூரின் முதல் வீரர் ஆகிறார். அக்டோபர் 4, 2022 அன்று வெளியிடப்பட்ட BWFஇன் தரவரிசையின்படி, 2021 பேட்மிண்டன் உலக சாம்பியனான லோ ஏழாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்னர் சிங்கப்பூரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக தரவரிசையில் இருந்த வீரர் ரொனால்ட் சுசிலோ ஆவார். அவர் 2004 இல் ஆறாவது இடத்தைப் பிடித்தார். லோ ஒரு மேல்நோக்கிய பாதையில் பயணித்ததே அவருக்கு உலகளாவிய புகழைத் தந்துள்ளது.

2021 இல் 39 வது இடத்தில் இருந்த லோ 2021 ஆம் ஆண்டின் இறுதியில் அவரது வலுவான ஆட்டத்தால் தரவரிசையில் முன்னேறினார். பின்னர் டிசம்பரில், 2021 BWF உலக சாம்பியன்ஷிப் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் சிங்கப்பூரர் என்ற வரலாற்றையும் படைத்தார்.அதில் அவர் ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்செல்சனை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

2022 இல் உலக தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த லோ, மலேசியாவின் சிலாங்கூரில் நடந்த பேட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் (BATC) போட்டியில் சிங்கப்பூர் ஆண்கள் அணிக்கு வெண்கலம் வென்றார். மே மாதம் நடந்த தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்றார்.

பின்னர் ஜூலை மாதம் நடந்த சிங்கப்பூர் பேட்மிண்டன் ஓபனில் லோ அரையிறுதியில் தோற்கடிக்கப்பட்டார். ஆகஸ்டில், 2022 BWF உலக சாம்பியன்ஷிப்பில் லோவால் தனது பட்டத்தை பாதுகாக்க முடியவில்லை. அதில் அவர் காலிறுதியில் வெளியேற்றப்பட்டார். அக்டோபர் 2022 இல் லோ டென்மார்க் ஓபனில் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.