நாளை சிங்கப்பூருக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார் மலேசியப் பிரதமர் அன்வர்… MFA வெளியிட்டுள்ள தகவல் !!

சிங்கப்பூருக்கு ஒரு நாள் பயணமாக மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்கள் திங்கள்கிழமை (ஜனவரி 30) அன்று வருகை புரிவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் 24 அன்று மலேசியாவின் 10வது பிரதமராக பதவியேற்ற மாண்புமிகு அன்வர் அவர்கள் சிங்கப்பூருக்கு வரும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இது. ஆகையால், அவருக்கு இஸ்தானாவில் வரவேற்பு விழா நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அதிபர் ஹலிமா யாக்கோப் அவர்களையும் பிரதமர் லீ அவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் அவரும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கும் பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை பார்வையிட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இரண்டு நாடுகளின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சகங்களுக்கு இடையேயான தரவு பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்றவற்றின் ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தங்களும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மலேசியப் பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் ஜாம்ப்ரி அப்துல் காதிர், போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டெங்கு ஜஃப்ருல் அஜீஸ் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் ஃபாஹ்மி ஃபட்சில் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர். MFA-யின் கூற்றுப்படி, பிரதமர் அன்வர் அவர்களின் சிங்கப்பூர் பயணம் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும், நமது மக்களுக்கும் இடையே உள்ள நெருக்கமான மற்றும் நீடித்த உறவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.