சம்பளப் பாக்கியை எப்போ தருவீங்க? – போராட்டம் செய்த தொழிலாளர்களுக்கு மனிதவள அமைச்சகம் பதில்!

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் சுமார் 268 பேருக்கு ஒப்பந்ததாரர் ஷாங்காய் சோங் கீ வழங்க வேண்டிய ஊதியம் நிலுவையில் இருந்தது.ஆத்திரமடைந்த ஊழியர்கள் ஆங் மோ கியோவில் உள்ள கட்டிடத்திற்கு வெளியே சம்பளத்தைத் தரக் கோரி போராட்டம் நடத்தினர்.
அவர்களுக்கு மனிதவள அமைச்சகம் ஆதரவு அளித்துள்ளது.போராட்டம் குறித்த நாடாளுமன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் மனிதவள மூத்த இணை அமைச்சர் ஜாக்கி முகமட் புதன்கிழமை (நவம்பர் 9) இந்த தகவலை வழங்கினார்.
ஷாங்காய் சோங் கீ என்ற நிறுவனப் பெயர் கொண்ட பலகைகளை ஏந்தியபடி, சம்பளம் கோரி பத்து பேர் கட்டிடத்தை முற்றுகையிட்டனர்.விசாரணையில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 268 பேருக்கு சம்பளம் கொடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

ஒப்பந்ததாரர் அக்டோபர் 31 இல் பழைய சம்பளப் பாக்கிகளை கொடுத்து முடித்து விட்டார்.மீதமுள்ள சம்பளத் தொகைக்கான அட்டவணையில் மனிதவள அமைச்சகம் இணைந்து பணியாற்றி வருவதாக திரு ஜாக்கி கூறினார்.எனவே,அவர் வேண்டுமென்றே சம்பளத்தை பாக்கி வைக்கவில்லை.
சில சவாலான நேரங்களில் சம்பளத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதையும் அமைச்சகம் புரிந்து கொள்கிறது.அதே சமயம் கட்டுமானத் துறையில் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்நிலையில் அமைச்சகம் நடுநிலையில் இருந்து தீர்வளிக்கும் என்றும் கூறினார்.தொழிலாளர்களுக்கான சம்பளம் ஓரளவு வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை இன்னும் நடந்து வருவதால் இது குறித்த முழுவிவரங்களை அதிகாரிகளால் வழங்க முடியவில்லை.இருப்பினும் தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும் போது அரசாங்கம் மிக வலுவான நடவடிக்கையை மேற்கொள்கிறது என்றும் அவர் கூறினார்.