மினி பேருந்தைச் சரி செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு!

Photo: Google Street View Of SMRT's Ang Mo Kio Depot

 

கடந்த ஜூன் 6- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள ஆங் மோ கியோ பணிமனையில் (Ang Mo Kio Depot) உள்ள ஆட்டோமோட்டிவ் சர்வீசஸ் வணிக பழுது பார்க்கும் மையத்தில் (Automotive Services Commercial Repair Centre) மினி பேருந்தை தொழிலாளர்கள் மூவர் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

மினி பேருந்தில் தளர்வாக இருந்த ஸ்டீயரிங்கை வீலைச் சரி செய்வதற்காக (Loose Steering Wheel) பேருந்தின் முன் பகுதியை இரண்டு ஜாக்கியைக் (Jacks) கொண்டு உயர்த்தினர். அதைத் தொடர்ந்து, பேருந்துக்கு கீழே தொழிலாளர்கள் ஸ்டீயரிங்கைச் சரிச் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு ஜாக்கில் ஒன்று திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக எதிர்பாராத விபத்து ஏற்பட்டது.

 

இந்த விபத்து குறித்து தகவலறிந்த சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த குழுவினர் (Singapore Civil Defence Force- SCDF) உடனடியாக அந்த பணிமனைக்கு விரைந்து படுகாயமடைந்த இரண்டு தொழிலாளர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கூ டெக் புவாட் (Khoo Teck Puat Hospital) மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதில் ஒரு தொழிலாளி குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.அந்த தொழிலாளிக்கு மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மற்றொரு தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

 

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக எஸ்.எம்.ஆர்.டி. பொதுபோக்குவரத்து நிறுவனம் (SMRT Public Transport) , எஸ்.எம்.ஆர்.டி. குழு உறுப்பினர் கியூக் கிம் பியூ தலைமையில் விசாரணை குழுவை அமைத்துள்ளது. குழுவில், மெக்கானிக்கல் பொறியியல் நிபுணர், சிங்கப்பூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் (Singapore Institute Of Technology) இணை பேராசிரியரான பேட்ரிக் சுவா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அதேபோல், காவல்துறையினர் (Police) மற்றும் மனிதவள அமைச்சகத்தின் (Ministry Of Manpower) தனித்தனி விசாரணைக்கு எஸ்.எம்.ஆர்.டி. உதவும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இதனிடையே, பணியிட பாதுகாப்பு மற்றும் உடல்நலம் கவுன்சில் (Workplace Safety and Health Council- ‘WSH’), “இரண்டு தொழிலாளர்கள் இரண்டு கார் ஜாக்கிகளைக் கொண்டு மினி பேருந்தை உயர்த்தியுள்ளனர். இதில் ஒரு ஜாக்கியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பழுது காரணமாக விபத்து ஏற்பட்டது. பேருந்துகள், லாரிகள் மற்றும் கனரக வாகனங்களை உயர்த்துவதற்கு கார் ஜாக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக கனரக வாகனங்களுக்கான ஜாக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.

 

தேசிய போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (National Transport Worker’s Union) கூறியதாவது, “உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துடன் தொழிற்சங்கத் தலைவர்கள் தொடர்பில் உள்ளனர். மேலும், அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.