மரண தண்டனை சரியா தவறா ? – அமைச்சர் சண்முகம் பேட்டியில் அளித்த கருத்து

(Photo : REUTERS)

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சமீபத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.மரண தண்டனை விதிக்கப்படுவதன் மூலம் போதைப் பொருள்களிடமிருந்து சிங்கப்பூரர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் மற்றும் பலரது உயிர்கள் காப்பாற்றப்படுகிறது என்பதை விமர்சனம் செய்பவர்கள் கவனிக்கத் தவறுவதாக உள்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

BBC-யில் கடந்த புதன்கிழமை ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிக்கு அவர் பேட்டி அளித்தார்.மரண தண்டனை விதிப்பதை மட்டுமே BBC பார்ப்பதால் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பாதிக்கும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மோசமான போதைப் பொருள் சூழ்நிலையை கவனிக்கத் தவறுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் கடத்தலுக்காக ஒருவருக்கு மரண தண்டனை விதித்து தூக்கிலிடுவது துயரமாகிறது.அதே வேளையில் போதைப்பொருளை உபயோகிப்பதால் மில்லியன் கணக்கானவர்கள் உயிரிழக்கின்றனர் என்பது புள்ளிவிவரம் போல் ஆகிவிடுகிறது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பணத்தேவைக்காக போதைப்பொருள் கடத்துபவர்களால் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் வாழ்க்கை நாசமாக்கப்படுகிறது.அவர்களை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தையும் அழிக்கிறது என்று அமைச்சர் கூறினார்.

ஒரே ஆண்டில் 5,00,000 மரணங்கள் போதைப்பொருள் தொடர்பாக நிகழ்வதாக 2021-ஆம் ஆண்டின் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டினார்.அமெரிக்காவில் வீரியம்மிக்க போதைப்பொருளை பயன்படுத்தியதற்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.