பஹ்ரைன் நாட்டு தலைவர்களைச் சந்தித்துப் பேசிய சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

Photo Credit: General Shaikh Nasser Bin Hamad Al Khalifa by Singapore Minister for Foreign Affairs Dr Vivian Balakrishnan, (Ministry of Foreign Affairs, Singapore)

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் ஒரு பகுதியாக, மார்ச் 19- ஆம் தேதி அன்று பஹ்ரைன் (Bahrain) நாட்டிற்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பஹ்ரைன் நாட்டின் முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து இரு தரப்பு உறவுகள், பொருளாதாரம் உள்ளிட்டவைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாலஸ்தீன பிரதமர் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்த சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், பஹ்ரைனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், ராயல் கார்டின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஷேக் நாசர் பின் ஹமத் அல் கலீஃபாவை (National Security Advisor and Commander of the Royal Guard His Highness Major General Shaikh Nasser Bin Hamad Al Khalifa) சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, இராஜதந்திர விவகாரங்களுக்கான மன்னரின் ஆலோசகர் ஷேக் காலித் பின் அகமது அல் கலீஃபா (His Majesty the King for Diplomatic Affairs His Excellency Shaikh Khalid Bin Ahmed Al Khalifa), வெளியுறவு அமைச்சர் மேதகு டாக்டர் அப்துல்லதீப் பின் ரஷித் அல் சயானி (Minister of Foreign Affairs His Excellency Dr Abdullatif Bin Rashid Al Zayani) ஆகியோரைத் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.

அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது சந்திப்புகளின் போது, ​​சிங்கப்பூர் மற்றும் பஹ்ரைன் இடையேயான நட்புறவை உறுதிப்படுத்தினார். சக சிறிய நாடுகளான், சிங்கப்பூர் மற்றும் பஹ்ரைன் பலதரப்பு மற்றும் விதிகள் அடிப்படையிலான உலகளாவிய ஒழுங்கை மேம்படுத்துவதில் பரஸ்பர ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.

சிங்கப்பூர், நியூயார்க் இடையே நேரடி விமான சேவையை வழங்கவிருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்!

பெரிய அல்லது சிறிய அனைத்து நாடுகளுக்கும் இறையாண்மை, அரசியல் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகிய கொள்கைகளில் பொதுவான நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்கிறோம். அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் பஹ்ரைன் தலைவர்கள் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் முன்னேற்றங்கள் குறித்தும் விரிவாக விவாதித்தினர். 2020- ல் பஹ்ரைன் கையெழுத்திட்ட ஆபிரகாம் ஒப்பந்தங்கள் (Abraham Accords) பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கு சாதகமாக பங்களிக்கும் என்று அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.” இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.