ஐ.எஸ்.ஐ.எஸ்.யை வீழ்த்துவதற்கான அமைச்சர்கள் கூட்டத்தில் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பங்கேற்பு!

 

ஜி 20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஐந்து நாள் அரசு முறை பயணமாக இத்தாலி சென்றுள்ளார். அங்கு வாடிகன் மற்றும் ரோம் நகரங்களுக்கு சென்ற அவர், தேவாலயங்கள், புனித பீட்டர் சதுக்கம் ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். மேலும், வாடிகனில் பல்வேறு முக்கிய தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.

 

அதைத் தொடர்ந்து ரோம் நகரில் நடந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை வீழ்த்துவதற்கான உலகளாவிய கூட்டணியின் அமைச்சர்கள் (Global Coalition to Defeat ISIS) கூட்டத்தில் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்றார்.

 

இது தொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், “47 நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைத் தோற்கடிப்பதற்கான உலகளாவிய கூட்டணியின் அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்டேன். ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் நீடித்த தோல்வியை உறுதிச் செய்வதற்கான முயற்சிகளுக்கு சிங்கப்பூர் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது. ஈராக் மற்றும் சிரியாவில் பிராந்திய தோல்வி இருந்தபோதிலும், அது ஒரு பரவலான உலகளாவிய இருப்பைத் தக்க வைத்துக் கொள்கிறது, டிஜிட்டல் கோளத்தை அதன் நெட்வொர்க்குகளை விரிவுப்படுத்துவதற்கும், தீவிரவாதத்தைப் பரப்புவதற்கும் பயன்படுத்துகிறது. எனவே, விழிப்புணர்வு இன்னும் தேவை.

 

நெருக்கமான சமூக ஈடுபாடு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தயார் நிலை ஆகியவற்றின் மூலம் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான சிங்கப்பூரின் முயற்சிகள் குறித்து நான் பேசினேன். சிங்கப்பூரில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு தகவல் வசதி உளவுத்துறைப் பகிர்வை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதையும் நான் எடுத்துரைத்தேன்.

 

ஹெலெனிக் குடியரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் நிகோஸ் டெண்டியாஸ் (Foreign Minister of the Hellenic Republic Nikos Dendias) மற்றும் துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லட் (Foreign Minister of Turkey Mevlüt Çavuşoğlu) ஆகியோருடன் இரு தரப்பு சந்திப்புகளை நடத்தியதில் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.