போலி இணையதளம்- மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தல்!

Photo: Ministry Of Manpower

 

சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம் (Ministry Of Manpower in Singapore) இன்று (15/06/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மனிதவள அமைச்சகத்தின் பேரில் www.mom-sg.org என்ற போலி இணையதளம் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே, மனிதவள அமைச்சகத்தின் தொடர்பான அனைத்து தகவல்களுக்கும், பரிவர்த்தனைகளுக்கும் மனிதவள அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.mom.gov.sg என்ற இணையதளத்தை மட்டுமே பயன்படுத்துமாறு பொதுமக்களை அறிவுறுத்துகிறோம். போலி இணையதளத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தயவு செய்து காவல்துறையிடம் புகாரைப் பதிவு செய்யுங்கள். இது போன்ற போலி இணையதளங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து அவற்றை வீழ்த்துவோம். அதிகாரப்பூர்வ மனிதவள அமைச்சகத்தின் இணையதளம் மிகவும் பாதுகாப்பானது. இதனால் உங்கள் தனிப்பட்ட தகவல் உள்ளிட்டவை மிகவும் பாதுகாப்பாக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இவை போலி இணையதளங்கள், போலி தொலைபேசி அழைப்புகள் மற்றும் போலி மின்னஞ்சல்கள் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக மோசடி எதிர்ப்பு (Anti- Scam Help Line) உதவி எண் 1800 722 6688- யை அழைக்கலாம்.

 

மோசடிகள் அவ்வப்போது தோன்றும். தங்களுக்கு வரும் எதிர்பாராத அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களில் மனிதவள அமைச்சகத்தில் இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும். மோசடி நபர்கள் உங்களிடம் பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களையும் கேட்கலாம். அவர்களிடம் எந்தவொரு தகவலையும் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மனிதவள அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்: 6438 5122 ஆகும்.

 

மனிதவள அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கும், போலி இணையதளத்திற்கும் URL- லில் மிகச்சிறிய வித்தியாசமே உள்ளதால் எது போலி, எது அதிகாரப்பூர்வ இணையதளம் என்பதை பொதுமக்கள் கவனமாகக் கண்டறிய வேண்டும்.

 

சிங்கப்பூரில் உள்ள தொழிலாளர்களுக்கென்று உருவாக்கப்பட்ட அமைச்சகம் மனிதவள அமைச்சகம். இந்த அமைச்சகம் தொழிலாளர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் அதன் துறையைச் சார்ந்த அனைத்து சேவைகளையும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.