$1 பில்லியன் மோசடி தொடர்பான வழக்கில் தொழிலதிபர் மீது குவியும் குற்றச்சாட்டுகள்!

New Upper Changi Road motorcyclist dies
Photo: SPF

 

சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் இங் யு ஸி (Ng Yu Zhi). இவருக்கு வயது 34. இவர் என்வி அசட் மேனேஜ்மெண்ட் (Envy Asset Management) மற்றும் என்வி குளோபல் டிரேடிங் (Envy Global Trading) ஆகிய நிறுவனங்களின் இயக்குநர் ஆவார். இவர் நிக்கல் (Nickel) வர்த்தக்கத்தில் குறைந்தபட்சம் $1 பில்லியன் தொகையைப் போட வைத்து முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. பணத்தை முதலீடு செய்தால் மூன்று மாத காலத்திற்கு சராசரியாக 15% வருவாய் கிடைக்கும் என்று முதலீட்டாளர்களிடம் ஆசை வார்த்தைக் கூறி பணத்தைப் பெற்றுள்ளார்.

 

அதை நம்பி முதலீட்டார்கள் போட்ட பணம் திரும்ப கிடைக்கவில்லை. இதையடுத்து, முதலீட்டாளர்கள் அனைவரும் காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் இங் யு ஸியை காவல்துறையினர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். அப்போது அவர் மீது வர்த்தக மோசடிகள் உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டனர்.

 

அதைத் தொடர்ந்து, நேற்று (28/06/2021) இங் யு ஸி மீது மேலும் 13 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதில் $200 மில்லியனுக்கும் அதிக தொகை தொடர்பில் அவர் நம்பிக்கை மோசடி செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதிய குற்றச்சாட்டுகளில் தேமாசெக் இன்டர்நேஷனல் (Temasek International) நிறுவனத்தின் பொது வழக்கறிஞர் பெக் சியோக் லான், குற்றவியல் வழக்கறிஞர் சுனில் சுதீசன் மற்றும் சட்ட சங்கத்தின் முன்னாள் தலைவர் தியோ சென் யி ஆகியோரின் பெயர்கள் பாதிக்கப்பட்டவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

பெக்கிடம் $5.5 மில்லியன், சுனிலிடம் $1 மில்லியன், தியோவிடம் $87,000 மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

இங் ஏமாற்றியதாகக் கூறப்படும் குறிப்பிடத்தக்க பெயர்களில் முதலீட்டு வல்லுநர்களும் அடங்குவர். அதில், விக்கர்ஸ் கேப்பிடல் குழுமத்தின் (Chairman of Vickers Capital Group) தலைவர் ஃபினியன் டானிடம் US$19.2 மில்லியன் (S$28.8 மில்லியன்) மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சுவான் ஹப் ஹோல்டிங்ஸின் தலைமை நிர்வாகி டெரன்ஸ் பெஹ்கிடம் $3 மில்லியன் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

 

கடந்த மாத நிலவரப்படி, குளோபல் டிரேடிங் நிறுவனத்திடமிருந்து, இங் யு ஸி-யிடம் இருந்தும் $50 மில்லியன் கேட்டு முதலீட்டாளர்கள் குறைந்தது நான்கு வழக்குகளை தொடுத்துள்ளனர்.

 

இங் யு ஸியிடம் இருந்து ஏறக்குறைய $100 மில்லியன் சொத்துக்களை வர்த்தக விவகாரத்துறை (Commercial Affairs Department) பறிமுதல் செய்துள்ளது.

 

இந்த விவகாரம் குறித்து சிங்கப்பூர் நாணயம் ஆணையம் (Monetary Authority of Singapore- ‘MAS’) கூறுகையில், “இங்- கின் எந்தவொரு நிறுவனத்திற்கும் சிங்கப்பூர் நாணய ஆணையம் உரிமம் வழங்கவில்லை. கடந்த மார்ச் மாதம் உரிமத்திற்காக விண்ணப்பிப்பதாக என்வி அசட் மேனேஜ்மென்ட் கூறியது. ஆனால், எந்தவொரு விண்ணப்பமும் சமர்ப்பிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளது.

 

இங் $1.5 மில்லியன் செலுத்தி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் ஜாமீன் பரிசீலனைக்காக அவர் வரும் ஜுலை 5- ஆம் தேதி அன்று நீதிமன்றத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.