இந்தோனேசியாவுக்கு 11,000- க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும் சிங்கப்பூர்!

Photo: Temasek Foundation Official Facebook Page

 

 

இந்தோனேசியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, இந்தோனேசியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 40,427 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு 891 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்தோனேசியாவுக்கு உலக நாடுகளும் உதவி வருகின்றன.

 

குறிப்பாக, சிங்கப்பூர் அரசு சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர்கள், முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் மருந்துப் பொருட்கள், ஆக்சிஜன் நிரப்பிய டேங்கர்கள் ஆகியவை விமானப்படை விமானம் மற்றும் சிங்கப்பூர் கடற்படை கப்பல் மூலம், இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவுக்கு அனுப்பி வைத்தது.

 

அந்த வகையில் டெமாசெக் அறக்கட்டளை நிறுவனம் (Temasek Foundation) இன்று (13/07/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தோனேசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் 11,000- க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகள் (oxygen concentrators) இந்தோனேசியாவுக்கு வழங்கப்படும். இதில் முதற்கட்டமாக 1,500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இன்றும் (13/07/2021), நாளையும் (14/07/2021) ஜகார்த்தாவிற்கு சென்று சேரும். அடுத்த சில வாரங்களில் மீதமுள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்படும். இவை அனைத்தும் இந்தோனேசியாவின் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படும்.

 

இன்றைய நிலவரப்படி, இந்த நன்கொடைக்கு தங்கள் பங்களிப்பை அளித்த நிறுவனங்களில் பக்தி பாரிட்டோ அறக்கட்டளை (Bakti Barito Foundation), சிகரங் லிஸ்ட்ரிண்டோ (Cikarang Listrindo), தர்ம சத்ய நுசாந்தாரா (Dharma Satya Nusantara), ஈஸ்ட் வென்ச்சர்ஸ் (East Ventures), இண்டீஸ் கேபிடல் பார்ட்னர்ஸ் (Indies Capital Partners), கினோ இந்தோனேசியா (Kino Indonesia), சினார் மாஸ் (Sinar Mas), டானோடோ அறக்கட்டளை (Tanoto Foundation), டிபிஎஸ் எனர்ஜி உட்டாமா (TBS Energi Utama), திரிபுத்ரா குழு (Triputra Group), யுஐடி அறக்கட்டளை (UID Foundation) ஆகியவை அடங்கும். சிங்கப்பூரில் உள்ள இந்தோனேசிய தூதரகமும் நன்கொடைகளை எளிதாக்க உதவுகிறது” எனத் தெரிவித்துள்ளது.

 

ஏற்கனவே, சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் பல்ஸ் ஆக்சிமீட்டர் (Oximeter) கருவியை இலவசமாக வழங்கி வருகிறது டெமாசெக் அறக்கட்டளை நிறுவனம் (Temasek Foundation) என்பது குறிப்பிடத்தக்கது.